http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__61428248882294.jpg

தமிழகத்தில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதியா?: கொரோனா தொடர்பான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை...!

சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பாக சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 60 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 31ம் தேதியோடு முடிவடைகிறது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட போதிலும், வைரஸ் தொற்றின் தீவிரம் குறைந்தபாடில்லை. இருப்பினும், கடந்த 14-ம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு எதிராக எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தின் தற்போதைய நிலையில், பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்துவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம்,  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.