முன்னாள் நிதியமைச்சர் மங்களவை விவாதத்திற்கு வருமாறு சவால்

by

மத்திய வங்கியின் முக்கிய குறிகாட்டிகள் தொடர்பில் விவாதத்துக்கு வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கு சவால் விடுத்துள்ளார்.

அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த பொருளாதாரத்தை 2015 நல்லாட்சி அரசாங்கம் மூச்சுவிடும் அளவுக்கு கொண்டு வந்தது.

இதன்கீழ் நல்லாட்சியின் நான்கு வருடங்களில் இலங்கையின் பொருளாதாரம் சீரடைந்து வந்தது. எனினும் கடந்த 6 மாதங்களில் மீண்டும் அது அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அது இறுதியில் சவச்சாலைக்கும் அனுப்பப்படலாம் என்று மங்கள சமரவீர தமது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

எனவே குற்றம் கூறுவதை விடுத்து தமது திட்டத்தை அறிவிக்குமாறு அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கோரியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட உறுப்பினர் செஹான் சேமசிங்க,

மங்கள சமரவீரவின் அறிக்கையில் எவ்வித நிதித்திட்டங்களும் காண்பிக்கப்படவில்லை. எனவே சேறு பூசுவதை விடுத்து விவாதத்துக்கு வருமாறு அவர் சவால் விடுத்துள்ளார்.

நிதியமைச்சராக இருந்தபோது பொருளாதாரத்தையும், வெளியுறவு அமைச்சராக இருந்தபோது நாட்டின் இறைமையையும் மங்கள சமரவீர அடக்கம் செய்துவிட்டார்.

இவை யாவும் எதிர்வரும் தேர்தலின்போது தெரியவரும் என்றும் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பொழுதுபோக்கு நேரத்தில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தாமல் செஹான் சேமசிங்கவின் சவாலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என மங்கள சமரவீரவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.