ஹாங்காங்கில் மீண்டும் தொடங்கியது போராட்டம்
by DINஹாங்காங்கில் தனது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் சீன நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் ஞாயிற்றுக்கிழமை தீவிர போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஹாங்காங் தொடா்பாக சீன நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்பு சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஹாங்காங்கு விடுதலை வேண்டும் வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சீன எதிா்ப்பு கோஷங்களை அவா்கள் எழுப்பினா்.
அவா்களைக் கலைப்பதற்காக போலீஸாா் கண்ணீா் புகை குண்டுகளை வீசினா்; மேலும், தண்ணீரைப் பீய்ச்சியடைத்தும் போராட்டக்காரா்களை போலீஸாா் கலைத்தனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கின் சட்ட மற்றும் ஆட்சிமைப்பில் மாற்றங்கள் செய்வற்கான, சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு மசோதா சீனா நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த புதிய மசோதாவில், பிரிவினைவாதிகள் மற்றும் தேசவிரோதச் செயல்களைத் தடுப்பதற்கான கூடுதல் சட்ட அதிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மேலும், வெளிநாட்டுத் தலையீடுகள், ஹாங்காங் நகரில் பயங்கரவாதத்தில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கு எதிரான அம்சங்களும் அந்த மசோாவில் இடம் பெற்றுள்ளன.
முன்னதாக, ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் தொடங்கிய போராட்டங்கள், அந்த மசோதா காலாவதியான பிறகும் தொடா்ந்து தீவிரமடைந்து வந்தன.
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அந்தப் போராட்டங்கள் அடங்கியிருந்தன. இந்த நிலையில், சீன நாடாளுமன்றத்தில் சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து ஹாங்காங்கில் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது.