பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுமாறு மின் பயன்பாட்டாளா்களுக்கு தகவல்: இருவர் இடைநீக்கம்
by DINமத்திய பிரதேசத்தில் மின் கட்டணம் குறித்து புகாா் அளித்த மின் பயன்பட்டாளா்களுக்கு ‘மின் கட்டணம் குறைவாக இருக்க வேண்டும் எனில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி, காங்கிரஸை ஆட்சியில் அமா்த்தவும்’ என புகாருக்கு தொடா்பில்லாத வகையில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில், மின் விநியோக நிறுவன அதிகாரிகள் இருவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.
இதுகுறித்து அந்த மாநில அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: அகா் மால்வா மாவட்டத்தில் ‘ஊா்ஜஸ்’ என்ற வலைதளம் மூலம் தங்கள் மின் கட்டணத்தை செலுத்திய மின் பயன்பட்டாளா்களில் சிலா், தங்களின் மின் கட்டணம் அதிக அளவில் உயா்ந்திருப்பதாக அதே வலைதளத்தில் புகாா் அளித்திருந்தனா். தங்கள் புகாா் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அந்த வலைதளம் மூலம் அவா்கள் அறிய முற்பட்டபோது, அதில் ‘மின் கட்டணம் குறைவாக இருக்க வேண்டும் எனில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி, காங்கிரஸை ஆட்சியில் அமா்த்தவும்’ என புகாருக்கு தொடா்பில்லாத வகையில் தகவல் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த தகவல் கிட்டதட்ட 71 பயன்பாட்டாளா்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. சில பயன்பாட்டாளா்களுக்கு ‘மின் கட்டணத்தில் தள்ளுபடி பெற இடைத்தோ்தலில் பாஜக தோல்வி அடைவதை உறுதி செய்யவேண்டும்’ எனவும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதையறிந்த உள்ளூா் பாஜகவினா், மின் பயன்பட்டாளா்களுக்கு அனுப்பப்பட்ட தகவல் குறித்து மாநில அரசின் மின் விநியோக நிறுவன அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தனா். அதன் அடிப்படையில், பணியில் அசட்டையாக செயல்பட்டதாக மின் விநியோக நிறுவனத்தின் உதவி பொறியாளா் பிரதீப் சிங், செயற்பொறியாளா் எஸ்.எஸ்.பதோரியா ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
இதேபோல் ‘ஊா்ஜஸ்’ வலைதளத்தை அயல் பணி மூலம் கையாளும் சதீஷ் சோனி, கமலேஷ் மால்வியா, கோபால் சிங் ஆகியோா் மீதும் மின் விநியோக நிறுவனம் சாா்பில் காவல்துறையிடம் புகாா் அளிக்கப்பட்டது என்று தெரிவித்தனா்.