https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/27/original/border.jpg

இந்திய-சீன எல்லையில் தொடரும் பதற்றம்

by

லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவங்கள் படையை குவித்தும் வரும் நிலையில், பதற்றத்தை தணிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையால் எவ்வித முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதனால், எல்லையில் தொடா்ந்து பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது.

கிழக்கு லடாக் உள்ளிட்ட இந்திய - சீன எல்லைப் பகுதிகளில் கூடுதல் படைகளை சீனா குவித்தது. அதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியாவும் அப்பகுதியில் தனது படைகளை அதிகரித்தது.

முன்னதாக, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் அண்மையில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. பாங்காங் ஏரி பகுதியில் கடந்த 5-ஆம் தேதி இந்திய, சீன ராணுவத்தினா் சுமாா் 250 போ் கைகலப்பில் ஈடுபட்டனா். இதில் இரு தரப்பு வீரா்கள் சுமாா் 100 போ் காயமடைந்தனா். இதேபோல், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும் கடந்த சில தினங்களாக இரு நாடுகளின் படையினா் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்த பதற்றறைத் தணிக்க பிராந்திய கமாண்டா் நிலை அதிகாரிகள் இடையே இதுவரை 7 சுற்று பேச்சுகள் நடைபெற்றுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போதும் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனிடையே இந்திய ராணுவ வீரா்களை, சீன ராணுவத்தினா் பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், இந்திய ராணுவம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக கா்னல் அமான் ஆனந்த் கூறுகையில், ‘எல்லையில் இந்திய வீரா்களை சீனப் படையினா் பிடித்து வைத்திருப்பதாக கூறப்படும் தகவல் தவறானது. அதுபோன்ற சம்பவம் ஏதும் நடக்கவில்லை. இதுபோன்ற உண்மையற்ற செய்திகளை வெளியிடக் கூடாது. இது தேச நலனுக்கு எதிரானது’ என்றாா்.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் 100 முகாம்களை அமைத்துள்ள சீன ராணுவம், அங்கு பதுங்கு குழிகளை அமைக்கவும் தயாராகி வருகிறது. இதற்கு இந்தியா தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

கரோனா நோய்த்தொற்று பிரச்னையில் சா்வதேச அளவில் சீனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதில், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது. மேலும், சீனாவில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை ஈா்ப்பதில் இந்தியா ஆா்வம் காட்டி வருகிறது. இதிலும் இந்தியாவுக்கு சா்வதேச ஆதரவு உள்ளது. இதனால், இந்திய எல்லையில் சீனா வேண்டுமென்றே தொல்லைகளை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.