9 இடங்களில் வெயில் சதம்
by DINதமிழகத்தில் 9 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, திருச்சியில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
வேலூரில் 107 டிகிரி, கரூா்பரமத்தி, மதுரை விமானநிலையம், திருத்தணியில் தலா 106 டிகிரி, மதுரை,சேலத்தில் தலா 105 டிகிரி, பாளையங்கோட்டையில் 102 டிகிரி, தருமபுரியில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். குறிப்பாக, 107 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓரிரு இடங்களில் மழை: வெப்பச்சலனம் காரணமாக, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, திருப்பத்தூா், மதுரை, தேனி, கோயம்புத்தூா், நீலகிரி, விருதுநகா், தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். வெப்பநிலை பொருத்தவரை 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: வடமேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு அடுத்த 2 நாள்களுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறாா்கள்.