ஆலயங்களுக்கு செல்ல தடை ஆனால் தேர்தலை நடத்துமாறு பரிந்துரை!

by

சுற்றுலாப் பயணங்கள் வரையறுக்கப்பட்டு, கூட்டங்களை நடத்த தடைவிதித்து சமூகத்திற்குள் பல சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலைமையில், தேர்தலை நடத்த முடியும் என இராணுவ அதிகாரி ஒருவர் செயலாளராக பதவி வகிக்கும் சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த பரிந்துரையானது சுகாதார அமைச்சுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் சம்பவம் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

“விகாரைகளுக்கு செல்ல முடியாது. கோயில்களுக்கு செல்ல முடியாது. முஸ்லிம்கள் ரமழான் பண்டிகையை வீட்டில் இருந்து கொண்டாடுகின்றனர்.

இது போன்று சமூகத்தில் அனைத்து இடங்களிலும் சட்டத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி, எதனையும் செய்ய முடியாத நிலைமையில், தேர்தலை நடத்த பொருத்தமான சூழல் உருவாக்கி இருப்பதாக சுகாதார அமைச்சு, ஜனாதிபதியின் செயலாளரிடம் அறிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

எது இல்லாமல் போனாலும் பரவாயில்லை தேர்தலை நடத்துங்கள் என இராணுவ அதிகாரி செயலாளராக பதவி வகிக்கும் சுகாதார அமைச்சு, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்கிறது.

சுகாதார துறையினருக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும், கேலிக்கு உள்ளாகும் விடயங்களாக நான் பார்க்கின்றேன்” என மனுஷ நாயணயக்கார குறிப்பிட்டுள்ளார்.