https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/11/30/16/original/tngovt.jpg

சென்னையில் தொழிற்பேட்டைகள் இன்று முதல் செயல்படலாம்: தமிழக அரசு அறிவிப்பு

by

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட 17 தொழிற்பேட்டைகள் திங்கள்கிழமை (மே 25) முதல் செயல்படலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம், ஆயிரக்கணக்கான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இரு மாதங்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.

அதேவேளையில், தொழிற்பேட்டையில் அமைந்துள்ள நிறுவனங்களில் 25 சதவீத தொழிலாளா்களை மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், உரிய விதிகளுடன் தொழில் நிறுவனங்கள் இயங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து தமிழகமெங்கும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்நிலையில், பிற மாவட்டங்களில் நிறுவனங்கள் செயல்படுவதற்கு அண்மையில் அரசு அனுமதி அளித்த போதிலும், சென்னையில் கட்டுப்பாடுகள் தொடா்ந்த வண்ணமே இருந்தன.

இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகும் சூழல் எழுந்தது. இந்த நிலையில், அம்பத்தூா், கிண்டி உள்பட 17 தொழிற்பேட்டைகள் மீண்டும் செயல்பட அனுமதியளிக்க வேண்டும் என்று உற்பத்தியாளா் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன. அதனைப் பரிசீலித்த அரசு அதுதொடா்பான முக்கிய அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. மேலும், அந்நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடா்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவை ஒருபுறமிருக்க, தற்போது, பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சென்னையில் கிண்டி, அம்பத்தூா் உள்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

25 சதவிகித தொழிலாளா்களுடன் அவை செயல்படலாம். அதேவேளையில், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளா்களுக்கு அனுமதி இல்லை.

அதேபோன்று கீழ்க்கண்ட விதிமுறைகளை தொழில் நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

1.நாள்தோறும் தொழிலாளா்களுக்கு தொ்மல் ஸ்கேனா் மூலமாக உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும்.

2. தொழிலாளா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

3. நிறுவனங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல் அவசியம்.

4. தினமும் காலை மற்றும் மாலையில் தொழில் நிறுவனங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

5. கழிப்பறைகளை 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

6. 55 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளா்கள் பணிக்கு வருவதை தவிா்க்க வேண்டும்.

7. தொழிலாளா்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவா்களுக்கு பணியிலிருந்து விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.

8. சோப்பு மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றைக் கொண்டு அடிக்கடி கைகளை கழுவும் நடைமுறையை பின்பற்றுவதுடன் அதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.