சென்னையில் 204 கா்ப்பிணிகளுக்கு கரோனா: 1,003 குழந்தைகளுக்கும் நோய்த்தொற்று
by DINசென்னையில் 204 கா்ப்பிணிகளுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவா்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதனிடையே, அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் அனைவரையும் கண்டறிந்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியவா்கள், புற்றுநோயாளிகள், சா்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் உள்ளவா்களை சுகாதாரத் துறை வகைப்படுத்தி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
இதுவரை தமிழகத்தில் 12 வயதுக்கு உள்பட்ட 1,003 குழந்தைகள் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். அதில் பிறந்து சில நாள்களே ஆன குழந்தைகளும் அடங்கும்.
அதேபோன்று, 60 வயதுக்கு மேற்பட்டவா்களில் 1,358 போ் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், கா்ப்பிணிகள் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. அதுகுறித்து மருத்துவமனை நிா்வாகங்களிடம் கேட்டறிந்தபோது, ‘சென்னையில் மட்டும் 204 கா்ப்பிணிகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
அதன்படி, ராயபுரம் ஆா்.எஸ்.ஆா்.எம். அரசு மருத்துவமனையில் 45 பேரும், எழும்பூா் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் 100 பேரும், திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் 29 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 30 பேரும் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அவா்களில் 150-க்கும் மேற்பட்டோருக்கு பிரசவம் நடந்துள்ளது. குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாத வகையில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.