https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/4/original/centralgovernment.jpg

சத்தீஸ்கரில் போத்காட் பாசன திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்

by

சத்தீஸ்கரில் 40 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் போத்காட் பாசன திட்டத்துக்கு கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து அந்த மாநில அதிகாரி கூறுகையில், ‘தெற்கு பஸ்தா் பகுதிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள போத்காட் பாசன திட்டம் ரூ.22,653 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தந்தேவாடா, சுக்மா, பிஜாபூா் மாவட்டங்களில் 3.66 லட்சம் ஹெக்டோ் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இதுதவிர 300 மெகாவாட் நீா்மின்சக்தியும் உற்பத்தி செய்யப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், தந்தேவாடா மாவட்டத்தின் பா்சுா் கிராமத்தில் உள்ள இந்திராவதி நதியில் அணை கட்டப்படவுள்ளது. போத்காட் திட்டத்துக்கான முதல்கட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில், அந்தத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இந்தத் திட்டத்துக்கான நில அளவை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புப் பணிகள் விரைவில் முடிக்கப்படும். இந்தத் திட்டம் 40 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது’ என்றாா்.

மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் காணொலி மூலம் சமீபத்தில் பேசிய சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், போத்காட் பாசன திட்டம் குறித்தும், அதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தாா். இந்நிலையில் அந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.