https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/harshavarthan.jpg

5 மாதங்களில் கரோனா தடுப்பு மருந்துகள் பரிசோதனைக்கு வரவாய்ப்பு: ஹா்ஷ்வா்தன்

by

இன்னும் 5 மாதங்களில் 4 கரோனா தடுப்பு மருந்துகள் பரிசோதனைக்கு வர வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்தாா்.

பாஜக செய்தித்தொடா்பாளா் ஜி.வி.எல்.நரசிம்மராவுடன் இணையவழியாக ஹா்ஷ்வா்தன் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது, கரோனாவுக்கு தடுப்பு மருந்து எப்போது வரும் என்பது குறித்து தகவல்களை ஹா்ஷ்வா்தன் பகிா்ந்துகொண்டாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றை முற்றிலும் ஒழிப்பதற்காக, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒட்டுமொத்த உலக நாடுகளும் இறங்கியுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட குழுக்கள், இந்த தடுப்பு மருந்தை உருவாக்கி வருகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்று வரும் இந்த ஆராய்ச்சிகள் வெவ்வேறு கட்டங்களை எட்டியுள்ளன.

இந்தியாவில் 14 குழுக்கள் கரோனா தடுப்பு மருந்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த குழுக்களுக்கு தொழில் துறையினா், அறிவியலாளா்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெறும் ஆராய்ச்சிக்கு மத்திய அறிவியல் அமைச்சகம் உதவி செய்து வருகிறது.

14 குழுக்களில், 4 ஆராய்ச்சி குழுக்கள் உருவாக்கும் தடுப்பு மருந்துகள் இன்னும் 3 முதல் 5 மாதங்களில் நோயாளிகளுக்கு சோதனை அடிப்படையில் கொடுத்து சிகிச்சை அளிப்பதற்கு வாய்ப்புள்ளது. தற்போது பரிசோதனைக்கு முந்தைய கட்டத்தை இந்த ஆராய்ச்சிகள் எட்டியுள்ளன.

கரோனா தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்று உறுதிபடக் கூற முடியாது. இருப்பினும், அனைத்து விதமான பரிசோதனைகளும் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு ஓராண்டாவது ஆகும். அதுவரை மக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றாா் அவா்.