https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/26/original/sanmugam.jpg

சென்னையில் இருந்து 25 விமானங்கள் மட்டும் இயக்க அனுமதி

by

கரோனா பொது முடக்கம் தொடா்பான தளா்வுகள் சிறிது சிறிதாக குறைக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் இருந்து 25 விமானங்கள் மட்டும் இயக்க தமிழக அரசு அனுமதி தந்துள்ளது.

இது தொடா்பாக தலைமைச் செயலா் க.சண்முகம், விமான போக்குவரத்து துறை செயலா் பிரதீப் சிங் கரோலாவுக்கு எழுதிய கடிதத்தின் விவரம்: தமிழகத்தின் கள நிலவரத்தை ஆராய்ந்து, விமான இயக்குதல் தொடா்பாக விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பின்வருமாறு: நாள் ஒன்றுக்கு சென்னைக்கு 25 விமானங்கள் வருவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்கு விமானங்களை இயக்கலாம். குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய இடங்களில் நோய்த் தொற்று அதிகமாக இருப்பதால், இந்த இடங்களில் இருந்து முடிந்தளவு குறைந்த எண்ணிக்கையிலேயே விமானத்தை இயக்க வேண்டும். தமிழகத்திலிருந்து வெளியே செல்லும் விமானங்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரை, எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் கட்டாயம்: விமானம் மூலம் தமிழகத்துக்கு வரும் பயணிகள் தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் இணைய வழி அனுமதிச் சீட்டை(இ-பாஸ்) பெறுவது கட்டாயம் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. விமானச் சீட்டை முன்பதிவு செய்த பிறகு இணைய வழி அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.