இலங்கையில் 3 வாரங்களில் கொரோனா பரவல் தீவிரமடையும் அபாயம் - சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை
by Vethu, Vethuஇலங்கையில் சுகாதார நடவடிக்கைகளை சரியான முறையில் பின்பற்றவில்லை என்றால் அடுத்த 3 வாரங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையும் என சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என அரசாங்கத்திடம் தான் அறிவித்த போதிலும் தனிமைப்படுத்தல் சட்டத்தை வலுப்படுத்தல், மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு திருப்பும் நடவடிக்கை, உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்றால் 3 வாரங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கும்.
அப்படி தலை தூக்கினால் தேர்தல் மாத்திரமல்ல ஒன்றையும் செய்ய முடியாது. தேர்தல் நடவடிக்கையை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பில் சுகாதார அதிகாரி என்ற ரீதியில் அதற்கான வாய்ப்புகளையே நான் கூறினேன்.
முழுமையாக கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டோம் என நான் கூற மாட்டேன். எனினும் இதே முறையில் சென்றால் எங்களால் கட்டுப்படுத்த முடியும் என எனக்கு தெரியும்.
சில அரசியல்வாதிகள் அதை திறவுங்கள் இதை திறவுங்கள் என்று கூறுகின்றார்கள். எனினும் எங்கள் பணியை செய்ய விடுங்கள். நாங்கள் அவற்றினை சரியாக செய்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.