திக்கு தெரியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்
* மகத்தான ஜனநாயக நாட்டில் ஏழைகளுக்கு நேர்ந்த அலட்சியம்
* தத்தளிக்கும் தொழிலாளர் குடும்பங்களை அலைக்கழித்த அவலம்
மத்திய, மாநில அரசுகள் ஏகப்பட்ட குழுக்களை அமைத்து, உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, தயார் நிலையில் அறிவித்திருக்க கூட இயலாத நிலையில் இருந்ததுதான் உண்மையில் வெட்கித்தலை குனிய வைக்க கூடியது. ஆம், ஒரு பக்கம் கொரோனா; இன்னொரு பக்கம் சொந்த ஊர் கூட திரும்ப முடியாத அளவுக்கு உயிரை கையில் பிடித்து கொண்டு நடுத்தெருவில் தத்தளிக்க வைத்த கொடூரம். சுமார் 5 கோடி பேர் பல மாநிலங்களில் இருந்தும் தங்கள் மாநிலத்துக்கு போக முடியாத அளவுக்கு அவரவர் வேலை செய்த இடங்களில் இருந்து கைவிடப்பட்டனர்; நடுத்தெருவுக்கு அனுப்பி ஒரே நாளில் தவிக்க விடப்பட்டனர்.
அவரவர் இடத்திலேயே வீட்டுக்குள் இரு...விழித்திரு...தனித்திரு என்று மட்டும் ெசான்ன அரசுகள், ஏன் இவர்கள் விஷயத்தில் இப்படி ஒரு உச்சகட்ட அலட்சியம்; எதிர்கட்சிகள் எவ்வளவோ கத்தியும், கதறியும் கூட செவிசாய்க்காதது மட்டுமின்றி, ‘வேண்டுமானால், பெட்டியை தூக்கி சென்று உதவலாமே’ என்று எக்காளமிட்டதும் அந்த அப்பாவி, வேகாத வெயில் என்றும் பாராமல், ஆயிரக்கணக்கான கி.மீ தூரத்தையும் நாட்கணக்கில் நடந்தே சென்றது தான் பலரின் கண்களை குளமாக்கியது. உலகின் மகத்தான ஜனநாயக நாடு இந்தியா; இப்படிப்பட்ட நாட்டில் கூட்டாட்சி தத்துவத்தில் தான் ஆட்சி என்ற இயந்திரம் நகர்கிறது. ஆனால், கூட்டாட்சி சிதையும் போது, இது போன்ற அலட்சியங்கள் தலைதூக்கி விடும் என்பது தான் சமூக சிந்தனையாளர்களின் வேதனை. இதோ நான்கு கோணங்களில் குமுறல் அலசல்கள்: