மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி ஜூன் 1ல் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன முழக்கம்
சென்னை: மின்கழக தொமுச பொதுச்செயலாளர் சிங்கார.ரத்தினசபாபதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பிரிவு தொழிற்சங்கங்கள் மற்றும் மின்வாரியத்தில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கூட்டு கூட்டம் கடந்த 21ம் தேதி நடந்தது. இதில், மின்சார தொழிலாளர் சம்மேளனம், மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மின்ஊழியர் மத்திய அமைப்பு, ஐஎன்டியுசி, பொறியாளர் சங்கம், மின்வாரிய தொழிலாளர் மற்றும் பொறியாளர் ஐக்கிய சங்கம், பொறியாளர் கழகம், பொறியாளர் யூனியன், எம்ப்ளாயீஸ் பெடரேஷன் ஆகிய சங்கங்கள் கலந்து கொண்டன.
கூட்டத்தில், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் கடிதத்தை அனுப்புவது, மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறு என்ற முழக்கத்துடன் வரும் ஜூன் 1ம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டு குழு சார்பாக பிரிவு அலுவலகங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து கண்டன முழக்கமிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.