திருவிக நகர் மண்டலத்தில் சுகாதாரத்துறை ஆய்வாளர் உள்பட 56 பேருக்கு கொரோனா தொற்று
பெரம்பூர்: சென்னையில் கொரோனா பாதிப்பில் திருவிக நகர் மண்டலம் 3வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்த மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 56 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. செம்பியம் நட்டால் கார்டன் 2வது தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர், கோபால் ரெட்டி காலனியில் 48 வயது அரசு பள்ளி ஆசிரியர், சின்னய்யா நியூ காலனியில் 32 வயது பெண் மருத்துவரின் கணவர், மாநகராட்சி ஊழியர் ஆகியோருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல், தலைமை செயலக காவலர் குடியிருப்பு பகுதியில் 49 வயது காவலர், பெரவள்ளூர் லோகோ 2வது தெருவில் 35 வயது வங்கி ஊழியர், ஓட்டேரி பென்சினர் லைன் பகுதியில் 51 வயது சுகாதாரத்துறை ஆய்வாளர், குளக்கரை சாலையில் 69 வயது நபர் ஆகியோருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
புளியந்தோப்பு நேரு நகர், சாஸ்திரி நகர், கன்னிகாபுரம் உள்ளிட்ட இடங்களில் தலா ஒருவர், புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் 7 வயது சிறுவன், பேசின் பிரிட்ஜ் பகுதியில் 2 பேர், அயனாவரம் பங்காரு தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், மதுரை தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், மயிலப்பா தெருவில் நிறை மாத கர்ப்பிணி, திருவிக நகரில் 69 வயது, பெண் என திருவிக நகர் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம்:கிழக்கு தாம்பரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த 47 வயது அரிசி வியாபாரி, அவரது 19 வயது மகன், 13 வயது மகள் ஆகிய 3 பேர், மேற்கு தாம்பரம் அண்ணா தெருவை சேர்ந்த 40 வயது ஆண், சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்த 49 வயது ஆண், கிழக்கு தாம்பரம் மகாலட்சுமி தெருவை சேர்ந்த 48 வயது ஆண், கிழக்கு தாம்பரம், ஆல் பொன்னுசாமி தெருவை சேர்ந்த 74 வயது ஆண் உட்பட 7 பேருக்கு நேற்று நோய் தொற்று ஏற்பட்டது. இதேபோல், பீர்க்கன்காரணை பகுதியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆலந்தூர்: நங்கநல்லூர் பிருந்தாவன் நகரில் தாய், மகனுக்கும், கே.கே.நகரில் கணவன், மனைவி, அவர்களின் 2 பெண் குழந்தைகள் மற்றும் மூதாட்டி உட்பட 5 பேர் என பழவந்தாங்கலில் மட்டும் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.