http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__952755153179169.jpg

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்துக்கு 14 ஆயிரம் கோடி வரிவருவாய் இழப்பு

* வணிகவரித்துறை உயரதிகாரி தகவல்

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக 14 ஆயிரம் கோடி வரிவருவாய் இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது என்று வணிகவரித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழக வணிகவரித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 70 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. இதில், தமிழக அரசின் மொத்த வருவாயில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை வணிக வரித்துறையின் மூலம்தான் கிடைக்கிறது. இதில், உற்பத்தி பிரிவை சேர்ந்த வணிகர்கள் வரி, மாநிலங்களுக்குள்ளே பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை தவிர்த்து ஆல்கஹால் மற்றும் எரி பொருட்கள் மூலம் வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய்தான் வணிகவரித்துறைக்கு பிரதானமாக உள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 24ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அதே நேரத்தில் கடைகள் மட்டுமே இயங்கியது. மேலும், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அனைத்து வாகனங்களும் ஓடாததால் பெட்ரோல், டீசல் விற்பனையும் குறைந்தது. கடந்த 2 மாதங்களில் ₹500 கோடி வரை மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. அதேபோன்று, வணிகர்கள் மூலம் 2,500 கோடி வரை மட்டுமே வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், வழக்கமாக கடந்த 2 மாதங்களில் வணிகர்கள் மூலம் 11 ஆயிரம் கோடி வரையும், ஆல்கஹால், எரிபொருட்கள் மூலம் 6 ஆயிரம் கோடியும் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

ஆனால், ஊரடங்கால் வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என வணிகவரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘கடந்த மார்ச் மாதத்துக்கான வரி வருவாய் ஏப்ரலில் 18 சதவீதம்தான் வந்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏப்ரல், மே மாத காலகட்டங்களில் இந்தாண்டு எதிர்பார்த்த வரிவருவாய் கிடைக்காது. குறைந்தபட்சம் 14 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது’ என்றார்.