ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 54 நாளுக்கு தினமும் 60 வழங்க கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நாளைக்கு 60 வீதம் 54 நாட்களுக்கு நிவாரணம் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரை சேர்ந்த தனசேகர் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மே 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திடீரென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அமைப்புசாரா மற்றும் கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். கொரோனா தொற்றை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க தேசிய பேரிடர் ஆணையம் வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக குறைந்தபட்ச நிவாரணம் வழங்க வேண்டும். விதவைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு சிறப்பு உதவி வழங்க வேண்டும்.
எனவே, ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு ஒரு நாளைக்கு 60 வீதம் 54 நாட்களுக்கு (மார்ச் 25ம் தேதி முதல் மே 17 வரை ) 3,240ம், ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 45 வீதம் 54 நாட்களுக்கு 2430ம் வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரவுள்ளது.