http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__574016749858857.jpg

காலை டிபன் முதல் இரவு டின்னர் வரை ரயிலிலேயே வாழ்க்கை நடத்திய தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளூரில் அகதிகளான அவலம்

* தனி மரமாக நிற்கும் தனியார் நிறுவன ஊழியர்கள்
* விவசாயிகள் மறந்த மலர் சாகுபடி
* கருகிய மாற்றுத்திறனாளிகள் வாழ்வு
* கழிவறை தொழிலாளி முதல் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் வரை மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்களில்தான் ஓட்டம் நடக்கிறது.
* சென்னையில் இருந்து சில ஆயிரங்களுக்கு பொருட்களை வாங்கி வந்து தெருவிலும் பங்க் கடையில் விற்று வந்தவர்களின் நிலைமை கடையை மூடிவிட்டு வீட்டில்
முடங்கி கிடக்கின்றனர்.

சென்னை: சென்னை மாநகரை நம்பி தனியார் நிறுவனங்களில் மாத சம்பளம், தினக் கூலி, வாரக் கூலிக்காக 60 கி.மீட்டர் சுற்றளவில் வசிக்கும் ஊழியர்களின் வாழ்க்கையின் பெரும்பகுதி ரயிலில் தான் பயணிக்கிறது. கொரோனா என்ற ஒற்றைச் சொல், 20 ஆண்டுகளுக்கும் மேலாக தினசரி வேலைக்கு வந்து சென்ற நபர்களின் வாழ்க்கையை சூனியமாக்கிவிட்டது. ஏறக்குறையை 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் நபர்களை சார்ந்த அந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் ஏறக்குறைய பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டது. மீண்டும் ரயில் இயங்கினால் மட்டுமே இவர்களின் வாழ்க்கை மீண்டும் மலர ஆரம்பிக்கும். குப்பையே அள்ளினாலும் உள்ளூரில் அள்ளாதே, சென்னையில் அள்ளு என்று ஒரு சொலவடை சென்னையை சுற்றி உள்ள கிராம, சிறிய நகரப் பகுதிகளில் இன்றளவும் இருக்கிறது.

இதற்காகவே சொந்த ஊரில் 8 ஆயிரம் சம்பளம் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ெவறும் 5 ஆயிரம் சம்பளத்துக்காக தினசரி ரயில்களில் சென்னை வந்து பணி முடிந்து செல்வோர் அதிகம். காரணம் பெண்ணோ, பையனோ திருமண வீட்டார் வந்து சம்பந்தம் பேசும்போது என் பையன் மெட்ராஸ்ல வேலை செய்கிறான் என்று கவுரவமாக சொல்வதற்கு சென்னை பணி ஒரு முக்கிய கருவியாக இருக்கிறது.இதற்காக விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அம்பத்தூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டையில் இருந்து தினசரி வேலைக்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை மட்டும் பல ஆயிரத்தை தாண்டும். இதில் அரசு ஊழியர்களே ஆயிரக்கணக்கில் வந்தாலும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

கிழக்கில் இருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மேற்கு பகுதிகளான அரக்கோணம், காட்டிபாடி, கடம்பத்தூர், திருத்தணி, திருவள்ளூர், அம்பத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து கிழக்கு நோக்கி வரும் ரயில்களில் தினசரி வேலைக்காக வருபவர்கள் பல ஆயிரம் பேர். அதேபோல எழும்பூர்-விழுப்புரம் மார்க்கம், சூலூர்-சென்னை சென்ட்ரல் மார்க்கம், வேளச்சேரி-சென்னை கடற்கரை மார்க்க ரயில்களிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பயணம் செய்கின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு சீசன் டிக்கெட் வரப்பிரசாதமாக அமைந்ததால் பஸ்கள் இயக்கப்பட்ட காலத்திலேயே ரயில்களில் பயணிப்பதுதான் ெபாருளாதார ரீதியாகவும், பயண நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் இருந்தது. இதனாலேயே பல ஆண், பெண் தொழிலாளர்களுக்கு காலை டிபன் ரயிலில், தலைவாருவது, மேக்அப் போடுவது எல்லாமே ரயிலில் தான்.

இப்படி 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் உள்ள ஏதாவது ஒரு தனியார் கடையில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பளம் வாங்கும் இந்த உடல் உழைப்பு சம்பளக்காரர்கள் நிலைமை உள்ளது. ஒரு நாள் வராவிட்டால் கூட சம்பளத்தில் கட், வேலைக்கு வர வேண்டாம் என்று கூறும் நிலையிலும் தினசரி பயணத்தை வெயில், மழை என்று பாராமல் வந்து செல்கின்றனர். இவர்களின் வாழ்க்கையில் சென்னை ேகாயம்பேடு, ரிச்சி தெரு, பூக்கடையில் உள்ள தனியார் கடைகள், குடோன் தெரு, நைனியப்ப நாயக்கன் தெரு, எழும்பூர், தி.நகர், வடபழனி, வண்ணாராப்பேட்டை, ஐடி, வங்கி உள்பட பல்வேறு நிறுவனங்களில் செக்யூரிட்டிகள் தான் அடுத்த மாத சாப்பாட்டை நிர்ணயிக்கின்றன.

இது குறித்து கடந்த பத்து ஆண்டுகளாக ரயிலில் சென்று வரும் பயணி ஒருவர் கூறுகையில், நாங்கள் வீட்டில் இருப்பதை விட ரயிலில் தான் எங்களின் வாழ்க்கையின் பெரும்பகுதி முடிந்து இருக்கிறது. மற்றவர்கள் இதை ரயிலாக பார்க்கின்றனர் நாங்கள் எங்கள் வாழ்க்கையாக பார்க்கிறோம். பலரின் விடியலும் இரவும் ரயிலில் தான். கழிவறை தொழிலாளி முதல் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் வரை மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்களில்தான் ஓட்டம் நடக்கிறது. சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் காய்கறி, மலர்கள், பழங்கள், பசும்பால் போன்றவை சென்னைக்கு கொண்டு செல்கின்றனர். இப்போது இவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது.

லட்சக்கணக்கில் இவர்களுக்கு நஷ்டம். நாங்கள் 50 நாட்களுக்கும் மேலாக வேலை இல்லாமலும் உணவு இல்லாமலும் தத்தளிக்கிறோம். சென்னை, ரயில் பயணத்தால் உள்ளூர் நண்பர்கள், தொடர்புகளை இழந்துவிட்டோம். மீண்டும் நாங்கள் பழைய வேலையில் சேர முடியுமா என்பது சந்தேகம்.  சென்னையில் இருந்து சில ஆயிரங்களுக்கு பொருட்களை வாங்கி வந்து தெருவிலும் பங்க் கடையில் விற்று வந்தவர்களின் நிலைமை கடையை மூடிவிட்டு வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். மின்சார ரயில்களிலும், சில எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் தான் மாற்றுத் திறனாளிகள் கீ செயின், பர்ஸ், கர்ச்சீப், பர்பி, ரேஷன் கார்டு கவர், ஏடிஎம் கார்டு கவர் போன்றவற்றை விற்று வந்தனர்.

ரயில்கள் முடக்கத்தால் அவர்களும் மாற்றுத் திறனாளிகள் இல்லங்களில் முடங்கிவிட்டனர். மீண்டும் சென்னையின் மேற்கு, வடக்கு, தெற்கில் இருந்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் நோக்கி ரயில்கள் சென்றால் தான் நாங்கள் எங்கள் வாழ்க்கையை தேடி சென்னைக்கு வர முடியும்’’என்றார்.