உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற புதிய சாட்சிய தகவல்கள்

by

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்ற தினத்துக்கு முதல் நாள் கொழும்பு தாஜ் சமுத்ரா விருந்தகத்தில் தங்கியிருந்த விருந்தனர்களில் குண்டுதாரிகளாக அடையாளம் காணப்பட்ட இருவரும் இருந்ததாக சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள ஜனாபதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த தாஜ் சமுத்ரா விருந்தகத்தின் பாதுகாப்பு முகாமையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வழமையாக தாஜ் சமுத்ராவில் தங்கியிருக்கும் விருந்தினர்களின் பட்டியலை தேசியப் புலனாய்வுப்பிரிவு காவல்துறையினருக்கு வழங்குவது வழக்கம்.

அந்தவகையில் ஏப்ரல் 20ம் திகதி வந்த விருந்தினர்களில் குண்டுதாரிகள் என்று அடையாளம் காணப்பட்ட இருவரின் பெயர்களும் இருந்தன. எனினும் இதில் ஒருவர் அன்றைய தினமே வெளியேறிவிட்டார். மற்றையவரே தெஹிவளையில் குண்டை வெடிக்கவைத்தவர் என்று விருந்தகத்து பாதுகாப்பு முகாமையாளர் குறிப்பிட்டார்.

தாக்குதலுக்கு முதல் நாள் மாலை 4.53 மணிக்கு தாஜ் சமுத்ரா விருந்தகத்துக்குள் குண்டுவெடிப்பாளர்களில் ஒருவர் நுழைந்ததாக விருந்தகத்தின் சிசிடிவி காட்சிகள் காட்டியுள்ளதாக அவர் கூறினார்.

குண்டுவெடிப்பாளர் 365 இலக்க அறையில் தங்கியிருந்தார், இருப்பினும், அதே நாளில் மாலை 5.44 மணிக்கு அவர் அங்கிருந்து இருந்து வெளியேறிவிட்டார். மீண்டும் திரும்பி வரவில்லை.

சந்தேக நபர் அப்துல் லத்தீப் ஜமீல் முகமது என்ற பெயரில் விருந்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபரின் தேசிய அடையாள அட்டையின் நகல் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சி.சி.டி.வி காணொளிக் காட்சிகள் சந்தேக நபரை அமைதியற்றவராகவும், எதையோ செய்ய முயற்சிப்பதாகவும் காட்டுகிறது. உணவகத்தில் அமர்ந்திருக்கும்போது, அவர் தனது பையுடனும் சம்பந்தப்பட்ட சில முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அவர் தமது கைத்தொலைபேசிக்கு வரும் உள்வரும் அழைப்பைக் கூட புறக்கணிக்கிறார். இதனையடுத்து சந்தேக நபர் உணவகத்திலிருந்து பையுடனும் வெளியேறியுள்ளார்.

எனினும் அந்த பை வெறுமையாகவே இருந்ததாக காட்டுகிறது என்றும் விருந்தகத்தின் பாதுகாப்பு முகாமையாளர் தெரிவித்தார்.

சந்தேகநபர் வருவதற்கு முன்னர் சந்தேகத்திற்கிடமான மற்றொருவர் விருந்தகத்துக்கு வந்தாரா? என்று ஆணைக்குழு சாட்சியைக் கேட்டது.

ஏப்ரல் 17, 2019 அன்று மதியம் 1.45 மணியளவில், ஒருவர் வந்து ஒரு அறையை எவ்வாறு முன்பதிவு செய்வது என்று விசாரித்தார்.

இதன்போது தாக்குதல்களுக்கு முன்னர் கிங்ஸ்பரி விருந்தகத்துக்கு சென்றவரின் காட்சிகளைஆணைக்குழு சாட்சிக்குக் காட்டியது.

தாஜ் சமுத்ரா விருந்தகத்துக்கு வந்தவரும் அவராக இருக்கலாம் என்று சாட்சி இதன்போது கூறினார்.

தாக்குதல்கள் நடந்தபோது முக்கியஸ்தர் எவராவது தாஜ் சமுத்ரா விருந்தகத்தில் இருந்தாரா என்று கேட்டபோது, யாரும் தங்கியிருக்கவில்லை அவர் சாட்சி கூறினார்.

இந்தநிலையில் தாஜ் சமுத்திராவில் இருந்து வெளியேறிய பின்னர் குண்டுவெடிப்பாளர் வாடகைக்கு அமர்த்திச்சென்ற 3 முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் ஆணைக்குழு முன் சாட்சியங்களை வழங்கினர்.

முதல் முச்சக்கர வண்டி ஓட்டுநர், பாகிஸ்தான் நாட்டவரைப் போல தோற்றமளிக்கும் ஒருவர் காலை 8.55 மணியளவில் தனது வாகனத்தில் ஏறியதாகக் கூறினார்.

ஆரம்பத்தில் அவரை தெஹிவளையில் இறக்கிவிட விரும்பினாலும், அவர் வெள்ளவத்தை சந்தை வளாகத்திற்கு அருகே இறங்கினார் என்று அவர் கூறினார்.

இரண்டாவது முச்சக்கர வண்டி ஓட்டுநர், வெள்ளவத்தையில் இருந்து தனது வாகனத்தில் ஏறிய சந்தேக நபர், தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் அருகே ஒரு ஓய்வு இல்லம் இருக்கிறதா என்று தம்மிடம் கேட்டதாக தெரிவித்தார்.

அவர் கேட்டுக்கொண்டதன்படி முற்பகல் 9.35 மணியளவில், தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் அருகே, தனக்குத் தெரிந்த ஒருவருக்குச் சொந்தமான விடுதியின் ஓய்வு இல்லத்திற்கு அவரை அழைத்துச் சென்றதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், மூன்றாவது முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.

பிற்பகல் 1.05 மணியளவில் தெஹிவளையில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அருகே தனது வாகனத்தில் ஏறிய நபர், சிறிது தூரம் பயணித்து விடுதியின் அருகே இறங்கியதாக தெரிவித்தார்.

இதையடுத்து, அவர் விடுதியில் நுழைந்தபோது மதியம் 1.30 மணியளவில் வெடிபொருள் வெடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.