4 முறை சுத்தம் செய்யப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள்
காலி சிலிண்டர்கள் கியாஸ் நிரப்புவதற்கு கொண்டு வரப்பட்டதும் நான்கு முறை சுத்தம் செய்யப்படுகிறது. சிலிண்டர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்றி விடக்கூடாது என்பதில் இந்தியன் ஆயில் நிறுவனம் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னையில் கொரோனா பரவல் அதிகளவில் இருப்பதால் அதை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நிலைகளிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்டு வரும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை 4 முறை சுத்தம் செய்து அதன் பிறகு லாரிகளில் ஏற்றும்போதும் கிருமி நாசினிகள் தெளித்து பின்னர்தான் வினியோகஸ்தர்களுக்கு அனுப்பப்படுகிறது.
அதே போல் வினியோகஸ்தர்களிடம் இருந்து டெலிவரி செய்வதற்கு கொண்டு செல்லும்போது கிருமி நாசினிகள் தெளிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களிலும் 60 லட்சம் நுகர்வோர்கள் இருக்கிறார்கள். தினமும் 80 ஆயிரம் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
காலி சிலிண்டர்கள் கியாஸ் நிரப்புவதற்கு கொண்டு வரப்பட்டதும் நான்கு முறை சுத்தம் செய்யப்படுகிறது. டெலிவரி செய்யும் நபர்கள் முகக்கவசம் அணிந்தும், கையுறை அணிந்து கொண்டும் சிலிண்டர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது.
சிலிண்டர்கள் நேரிடையாக வீடுகளுக்குள் செல்வதால் அதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றி விடக்கூடாது என்பதில் இந்தியன் ஆயில் நிறுவனம் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.