வேலையை விட்டுவிட்டு இந்தியா விரைந்த வாலிபர்: கோரன்டைனால் இறந்த தாயின் முகத்தைக்கூட பார்க்க முடியாத சோகம்
துபாயில் வேலையை விட்டுவிட்டு தாயை பார்க்க இந்தியா வந்த வாலிபர், கோரன்டைன் நடவடிக்கையால் இறந்த தாயின் முகத்தை பார்க்க முடியாத சோகம் நிகழ்ந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஆமிர் கான். இவர் கடந்த 6 வருடமாக துபாயில் பணிபுரிந்து வருகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவால் மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலையும், வெளிநாட்டில் உள்ளவர்கள் சொந்த நாடு திரும்ப முடியாத நிலையிலும் உள்ளனர்.
ஆமிர் கானின் அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லாததால் வேலையை விட்டுவிட்டு அம்மாவுடன் தங்கியிருக்க முடிவு செய்தார். மே 2-வது வாரத்தில் இருந்து வெளிநாட்டில் சிக்கியவர்களை விமானம் மூலம் இந்தியா அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்தது.
துபாயில் இருந்து ஆமிர் கானும் தாயின் உடல்நிலை சரியில்லாததை சுட்டிக்காட்டி இந்தியா வர அனுமதி பெற்றார். வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் நபர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை உள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
அவர் இந்தியாவுக்கு 13-ந்தேதி வந்தடைந்தார். 27-ந்தேதிவரை தனிமைப்படுத்தும் நாட்கள் இருந்தன. இதற்கிடையே வழிமுறையில் மாற்றம் செய்து சொந்த செலவில் 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அதன்பின் ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.
ஆமிர் கான் புதிய வழிகாட்டுதலின்படி எனக்கு 7 நாள் முடிந்துவிட்டது. அடுத்த ஏழு நாட்கள் என்னை வீட்டில் தனிமைப்படுத்துகிறேன். வேண்டுமென்றால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று மன்றாடியுள்ளார்.
ஆனால் அதிகாரிகள் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அவரது அம்மாவில் உடல்நிலை மிகவும் மோசமாகி இறந்து போனார். நேற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குக்கூட ஆமிர் கான் அனுதிக்கப்படவில்லை. தாயை பார்க்க வேலையை விட்டுவிட்டு வந்த போதிலும், இறந்த தாயின் முகத்தைக்கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதாக ஆமிர் கான் கண்ணீர் விட்டுள்ளார்.