வட இந்தியாவில் மே 29-30-ல் புழுதிப் புயல், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: மத்திய வானிலை மையம்
வட இந்தியாவில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் வருகிற 29-30-ந்தேதிகளில் புழுதிப் புயல், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட இந்தியாவில் வெயில் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக இன்றும் நாளையும் வெப்பம் அதிகமாக இருக்கும். காலை 10 மணிக்குப்பிறகு பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில் வெயில் 45 டிகிரி செல்சியஸ்-க்கும் அதிகமாக இருந்தது. ஊரடங்கால் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வருகிறது 29-30-ந்தேதிகளில் புழுதிப் புயல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிமை மையம் தெரிவித்துள்ளது. அப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். தற்போது நிலவி வரும் வெப்பத்தை தணிக்க, இந்த வானிலை உதவிகரமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து மத்திய ஆசியாவை நோக்கி வீசும் காற்று இமயமலையை அடையும்போது மலைப் பகுதியிலும், சமவெளிப் பகுதியிலும் மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.