https://img.maalaimalar.com/Articles/2020/May/202005251003000396_Tamil_News_Thermal-Checks-Flight-Crew-In-PPE-Suits-As-India-Flies_SECVPF.gif

தெர்மல் ஸ்கிரீனிங், முழு கவச உடைகளில் விமான ஊழியர்கள்: பாதுகாப்புடன் உள்நாட்டு விமானங்கள் இயக்கம்

அனைத்து பயணிகளும் தங்கள் செல்போன்களில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்கவேண்டும் என்றும், பயணிகளுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட விமான சேவை 2 மாதங்களுக்கு பிறகு இன்று தொடங்கி உள்ளது. உள்நாட்டு விமான சேவை மட்டும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும், பணிக்கு திரும்பவும் இன்று காலையிலேயே விமான நிலையங்களுக்கு வந்தனர்.

முதல் விமானங்களில் துணை ராணுவ வீரர்கள், ராணுவ வீரர்கள், மாணவர்கள் மற்றும் சிறப்பு ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய தவறிய புலம்பெயர்ந்தோர் பயணம் செய்தனர்.

முதல் உள்நாட்டு விமானம் டெல்லியில் இருந்து புனேவுக்கு அதிகாலை 4:45 மணிக்கு புறப்பட்டது. டெல்லி விமான நிலையத்திற்கு முதல் விமானம் காலை 7:45 மணிக்கு வந்தது.

https://img.maalaimalar.com/InlineImage/202005251003000396_1_chennai-airport-passenger._L_styvpf.jpg

கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாக இருப்பதால் விமான பயணங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அனைத்து இடங்களிலும் சமூக விலகல், பயணிகளின் உடலை தொட்டு பரிசோதனை செய்யாமல் வெப் செக்இன் உள்ளிட்ட அம்சங்கள் தீவிரமாக பின்பற்றப்பட்டன. விமான ஊழியர்கள் பாதுகாப்பு கவச உடைகள் (பிபிஇ உடை) அணிந்திருந்தனர்.

உள்நாட்டு விமான சேவை தொடர்பான முக்கிய தகவல்களை பார்ப்போம்.

* அனைத்து பயணிகளும் தங்கள் செல்போன்களில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளின் உடல் வெப்ப பரிசோதனையை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். பயணிகள் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே, விமான நிலையத்தை அடைந்து சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்.

* விமான டிக்கெட்டுகளின் விலை அடுத்த மூன்று மாதங்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.18,600 வரை 7  நிலைகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது விமானத்தில் பயணம் செய்யும் கால அளவைப் பொருத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் நடு இருக்கையை காலியாக வைக்கவேண்டும். நடு இருக்கையை காலியாக வைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

* பாஜக ஆளும் அசாம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள், பயணிகள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக இருக்கும் என்று கூறியுள்ளன. உத்தரபிரதேசத்திற்கு பயணிக்கும் நபர்கள் 14 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள். ஒரு வாரத்திற்கும் குறைவாகவே தங்கியிருப்பவர்கள் அல்லது ஏற்கனவே கொரோனா வைரஸ் பரிசோதனை செய்தவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.

* ஆந்திரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநில அரசுகள், பயணிகள் சேவையை தொடங்குவதற்கு கூடுதர்ல அவகாசம் கேட்டுள்ளன. அம்பன் புயலால் மேற்கு வங்காளத்தில் விமான நிலைய ஓடுபாதை வெள்ளத்தில் மூழ்கிருந்தது. இரண்டு ஹேங்கர்களும் கடுமையாக சேதமடைந்ததால், கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

* கொரோனா தாக்கம் உச்சத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலமும் விமான சேவையை தொடங்க அவகாசம் கேட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தனது முடிவை மாறிய அரசு,  மும்பையில் இருந்து 25 விமானங்களையும் மும்பைக்கு 25 விமானங்களையும் இயக்கப்போவதாக கூறியது. 

Related Tags :

Flight Service | Coronavirus Lockdown | விமான சேவை | ஊரடங்கு உத்தரவு | உள்நாட்டு விமான் சேவை