![https://img.maalaimalar.com/Articles/2020/May/202005251133357942_Tamil_News_Pak-plane-crash-Pilot-ignored-warning-about-plane-height_SECVPF.gif https://img.maalaimalar.com/Articles/2020/May/202005251133357942_Tamil_News_Pak-plane-crash-Pilot-ignored-warning-about-plane-height_SECVPF.gif](https://img.maalaimalar.com/Articles/2020/May/202005251133357942_Tamil_News_Pak-plane-crash-Pilot-ignored-warning-about-plane-height_SECVPF.gif)
கராச்சி விமான விபத்துக்கு பைலட்டின் அலட்சியம்தான் காரணம்- எச்சரிக்கையை மீறியதாக தகவல்
கராச்சி விமான விபத்துக்கு பைலட்டின் அலட்சியம் தான் காரணம் என்றும், கட்டுப்பாட்டு மையத்தின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் தரையிறக்க முயன்றதால் விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கராச்சி:
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து நேற்று முன்தினம் கராச்சி நோக்கி சென்ற பயணிகள் விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்க முற்பட்டபோது அருகில் உள்ள குடியிருப்பில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 97 பேர் மரணம் அடைந்தனர். 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விமானம் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டு நிலைய எச்சரிக்கையை பைலட் மீறியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
![https://img.maalaimalar.com/InlineImage/202005251133357942_1_karachi-crash._L_styvpf.jpg https://img.maalaimalar.com/InlineImage/202005251133357942_1_karachi-crash._L_styvpf.jpg](https://img.maalaimalar.com/InlineImage/202005251133357942_1_karachi-crash._L_styvpf.jpg)
மதியம் 1.05 மணிக்கு லாகூரில் புறப்பட்ட அந்த விமானம் 2.30 மணிக்கு கராச்சியில் தரையிறங்கவேண்டும். 2.30 மணிக்கு கராச்சியில் இருந்து 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் விமானம் பறந்தபோது, தரையில் இருந்து 7000 அடி உயரத்தில் பறப்பதற்கு பதிலாக 10000 அடி உயரத்தில் பறந்துள்ளது. இதனைக் கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், உயரத்தை குறைக்கும்படி பைலட்டுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், விமானம் பறக்கும் உயரத்தை குறைப்பதற்கு பதிலாக, சரியாக இருப்பதாக கூறி உள்ளார். கராச்சி விமான நிலையத்தை அடைய 10 நாட்டிக்கல் மைல் இருந்தபோது, விமானம் பறக்கும் உயரம் 3,000 அடிக்கு பதிலாக 7,000 அடியாக இருந்துள்ளது. எனவே, இரண்டாவது முறை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அப்போதும் தனக்கு திருப்தி அளிப்பதாக கூறிய பைலட், விமானத்தை தரையிறக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.