மின்சார வினியோகத்தை தனியார்மயமாக்குவதை ஏற்க முடியாது- நாராயணசாமி
புதுச்சேரியில் மின்சார வினியோகத்தை தனியார்மயமாக்குவதை ஏற்க முடியாது என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 4 நாட்களாக புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தடுக்க புதுவைக்கு அனுமதி இல்லாமல் வருபவர்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மத்திய அரசு அறிவித்த நிதி உதவி திட்டங்கள் ஏழை மக்களுக்கும் சிறு சிறு தொழிற்சாலைகளுக்கும் பயனளிக்க கூடியதாகும். மக்களின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினால் அவர்களது வாங்கும் சக்தி அதிகரிக்கும்.
யூனியன் பிரதேசங்களில் மின்சார வினியோகம் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தமிழகம், புதுச்சேரியில் விவசாயிகள், ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. மின்சார வினியோகம் தனியார் மயமாக்கப்பட்டால் இலவச மின்சாரம் வழங்குவது பாதிக்கப்படும்.
எனவே தனியார் மயத்தை நாம் ஏற்கமுடியாது. தற்போதைய நிலை நீடித்தால் தான் விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் இலவச மின்சாரம் கிடைக்கும் என நான் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். மின்சாரம் வினியோகம் தனியார் மயமானால் யாருக்கும் பலன் கிடைக்காது. எனவே மின்சார வினியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை.
மத்திய அரசானது எந்த நிபந்தனையுமின்றி மாநிலங்களுக்கு நிதி ஆதாரங்களை தர வேண்டும். இந்த நேரத்தில் அரசியல் செய்யக்கூடாது. மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். புதுவையில் மதுக்கடைகளை திறக்க 2 முறை அமைச்சரவை கூடி முடிவெடுத்து அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அதாவது தமிழகம், புதுவையில் ஒரே விதமான விலையை நிர்ணயம் செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாகி, ஏனாமிலும் மதுக்கடைகளை திறக்க கோப்புகளை அனுப்ப உள்ளோம்.
மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்க ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த திட்டத்தை அடுத்த வாரம் நிறைவேற்றுவோம். தமிழகத்தில் தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ் பாரதி மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்து அவர் விரைவில் மீண்டு வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.