தமிழ்நாட்டில் மின்தேவை அதிகரிப்பு- அதிகாரி தகவல்
தமிழ்நாட்டில் இந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 ஆயிரம் மெகாவாட் மின்தேவை அதிகரித்துள்ளதாக மின்வாரிய உயர்அதிகாரி தெரிவித்தார்.
சென்னை:
தமிழகத்தில் அக்னி வெயில் வாட்டி வதைப்பதால் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் வீடுகளில் மின்விசிறியின் உபயோகம் அதிகரித்துள்ளது. வசதி படைத்தவர்கள் குளிர்சாதன வசதியை (ஏ.சி.) அதிக மணி நேரத்துக்கு உபயோகப்படுத்துகின்றனர்.
இதனால் ஒவ்வொரு வீட்டிலும் அதிகமாக மின்சாரம் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாத இறுதியில் தமிழகத்தின் மின் தேவை 9,750 மெகாவாட்டாக இருந்தது.
இந்த மாதம் மின்தேவை மிகவும் அதிகரித்து 13 ஆயிரத்து 896 மெகாவாட் அளவுக்கு உயர்ந்து விட்டது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 ஆயிரம் மெகாவாட் மின்தேவை அதிகரித்துள்ளது.
தற்போது 17 தொழில்பேட்டைகளை இயங்க அரசு அனுமதி கொடுத்துள்ளதால் வரும் நாட்களில் மின்தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து மின்வாரிய உயர்அதிகாரி கூறுகையில், ‘தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக மின்உற்பத்தி உள்ளது. 18 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி நடைபெற்று வருவதால் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை’ என்று தெரிவித்தார்.