https://img.maalaimalar.com/Articles/2020/May/202005250919026478_Tamil_News_Hockey-legend-Balbir-Singh-Sr-passes-away_SECVPF.gif

இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பிர்சிங் காலமானார்

இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பிர்சிங் உடல்நலக்குறைவால் மொகாலியில் காலமானார்.

புதுடெல்லி:

இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பிர்சிங் (வயது 96) மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 8-ம் தேதி மொகாலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 12-ந்தேதி அன்று அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு மேலும் இருமுறை மாரடைப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக தொடர்ந்து பல்பீர் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஒலிம்பிக்கில் மூன்று முறை தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பிடித்தவர் ஆவார்.

இந்திய ஹாக்கி அணி 1948, 1952, 1956 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார் பல்பிர்சிங். 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் இவர் தலைமையில்தான் இந்திய அணி தங்கம் வென்றது. ஒலிம்பிக் ஹாக்கி இறுதிப் போட்டியில் அதிக கோலடித்தவர் என்ற சாதனை பல்பிர் சிங் வசமே உள்ளது.

1952-ல் நெதர்லாந்து அணிக்கு எதிராக இறுதிச்சுற்றில் இந்திய அணியில் (6-1) வெற்றியில் 5 கோல்கள் அடித்து அசத்தினார் பல்பிர் சிங். 1975 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றபோது பல்பிர் சிங்  தலைமைப் பயிற்சியாளராகவும் மேலாளராகவும் இருந்தார். 1957-ல் பத்மஸ்ரீ விருது பல்பிர் சிங்குக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Balbir Singh | India Hockey Legent | பல்பிர்சிங் | இந்திய ஹாக்கி அணி