தொழிலாளர்கள் நலன்களை பாதுகாப்போம் - நிதி ஆயோக் துணைத்தலைவர் உறுதி
தொழிலாளர் சட்டங்களை கைவிடுவது சீர்திருத்தம் அல்ல. தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்க உறுதி பூண்டுள்ளோம் என்று நிதி ஆயோக் துணைத்தலைவர் கூறினார்.
புதுடெல்லி:
கொரோனா அச்சுறுத்தலுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கால், பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பொருளாதார நடவடிக்கைகளுக்கு புத்துயிரூட்ட உத்தரபிரதேசம், குஜராத், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், தொழிலாளர்கள் சட்டங்களில் திருத்தம் செய்துள்ளன. அல்லது, தொழிலாளர்கள் சட்டங்களை 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்துள்ளன.
இதன்மூலம் தொழிலாளர்கள் வேலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்துள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து ‘நிதி ஆயோக்’ துணைத்தலைவர் ராஜீவ் குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
சர்வதேச தொழிலாளர் அமைப்பில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. எனவே, தொழிலாளர்கள் சட்டங்களை எந்த மாநிலமும் கைவிட முடியாது என்று அனைத்து மாநில அரசுகளிடமும் சொல்ல மத்திய தொழிலாளர் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம், சீர்திருத்தம் என்பது தொழிலாளர்கள் சட்டங்களை முற்றிலுமாக கைவிடுவது அல்ல என்று மத்திய அரசு கருதுகிறது. தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. மற்ற நாடுகளை போலவே இந்தியாவும் கொரோனாவால் எதிர்மறை தாக்கத்தை கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இரு மாதங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன.
இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், எதிர்மறையாக அமையுமா என்பதை இப்போதே சொல்ல முடியாது.
ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சிறப்பு திட்டம், தேவையை அதிகரித்து, பொருளாதாரத்தை புனரமைப்பதை நோக்கமாக கொண்டது.
கொரோனா சர்ச்சையால், சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்கு வரவழைப்பது சாத்தியம்தான். அதற்கு அந்த நிறுவனங்களை குறிவைத்து சரியான கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.