http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__913067042827607.jpg

அதிமுக அரசின் நிர்வாக அலங்கோலத்தை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது: திமுக கடும் எச்சரிக்கை

* திமுகவினர் மீது வழக்குப் போடுவது இன்றைக்கு எளிதாகவும் இன்பமாகவும்  இருக்கலாம். ஆனால் அதற்கு சட்டத்தின் முன்பு தகுந்த பதிலைச் சொல்ல வேண்டிய  காலம், வெகு தொலைவில் இல்லை.

சென்னை: அதிமுக அரசின் நிர்வாக அலங்கோலத்தை இனி மேலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று திமுக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உடனான ஆலோசனை கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது. இக்கூட்டத்தில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அந்தியூர் ப.செல்வராஜ்க்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து,  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை ஆளும் அதிமுக அரசு கைது செய்தபோது, அவருக்கு இடைக்கால ஜாமீன் பெற்றிட நீதிமன்றத்தில் வாதாடிய திமுக சட்டத்துறைக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த இக்கூட்டத்தில் ஒவ்வொரு எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்களிடம் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணி எந்த நிலையில் உள்ளது, மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்யலாம், திமுகவினர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை சட்ட ரீதியாக எவ்வாறு முறியடிப்பது என்று  மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது தொடர்பாக அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு : பட்டினிச் சாவினைத் தடுத்திடும் திமுகவின் “ஒன்றிணைவோம் வா” திட்டத்திற்கு தமிழக மக்கள் அளித்த அமோக வரவேற்பை பொறுத்துக் கொள்ள முடியாமலும் - கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திலும், குறைபாடுகளினாலும் குளறுபடிகளினாலும் முழுத் தோல்வியடைந்துவிட்ட விரக்தியிலும் - திமுக மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்யும் படலத்தைத் தொடங்கியிருக்கும் அதிமுக அரசுக்கு  இந்தக்  கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

முதலமைச்சர், துணை முதலமைச்சர், உள்ளாட்சித் துறை அமைச்சர் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் பலர் மீது “கொரோனா ஊழல்” புகார் அளித்த அமைப்புச் செயலாளரும், எம்பியுமான ஆர்.எஸ்.பாரதியை “கொரானா காலத்திலும்” அவசரமாக அதிகாலையில் கைது செய்தது. “ஏன் ஆய்வு கூட்டங்களுக்கு சட்டமன்ற உறுப்பினரை அழைக்கவில்லை” என்று கேட்டதற்காக கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில்பாலாஜி மீது கலெக்டரை புகார் கொடுக்க வைத்து, வழக்குப் பதிவு செய்தது.  உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஊழல்களைத்  தட்டிக்கேட்கும் கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் மீதும், கோவை - திருப்பூர் பகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகள் மீதும் போலீஸை ஏவி விட்டு வழக்குப் பதிவு செய்து - கைது செய்தது,

கோவை மாநகர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எம்.எஸ்.ராமமூர்த்தியை கைது செய்தது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஊழலைப் பதிவிட்டதற்காக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஐந்து நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தது - இதுதவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அதிமுக அமைச்சர்கள் காவல்துறையை தமது மனம்போன போக்கில் பயன்படுத்தி, திமுகவினர் மீதும், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீதும், அறிவிக்கப்படாத யுத்தத்தை நடத்தி - பொய் வழக்குப் போட்டுக் கைது செய்வது என்ற இந்த அனைத்தும் ஜனநாயக விரோத, தன்னிச்சையான, அராஜகச் செயல்கள் என்பதை விட - கருத்துச் சுதந்திரத்தையும், அரசியல் கட்சிகளின் ஜனநாயக முறையிலான செயல்பாட்டையும் தடுக்கும் ,  அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

திமுகவினர் மீது வழக்குப் போடுவதற்கும், கைது செய்வதற்கும்,  உள்ளாட்சியின் “ஊழல் அமைச்சராக இருக்கும்” வேலுமணி, போலீஸ் துறைக்கும் நிஜ அமைச்சராகச் செயல்படுவதும் - அவருக்கு காவல்துறை அதிகாரிகள் கைகட்டி நின்று கட்டளைகளை ஏற்றுச் சேவகம் செய்வதும், இன்றைக்கு எளிதாகவும் இன்பமாகவும்  இருக்கலாம். ஆனால் அதற்கு சட்டத்தின் முன்பு தகுந்த பதிலைச் சொல்ல வேண்டிய  காலம், வேலுமணிக்கும், அவருக்கு  துணை போகும் காவல்துறை அதிகாரிகளுக்கும், வெகு தொலைவில் இல்லை.

“கொரோனா தோல்விகளையும்”, “கொரோனா ஊழல்களையும்” திசை திருப்பி - திமுகவின் “ஒன்றிணைவோம் வா” என்ற எழுச்சி ஊட்டும் மக்கள்  நிகழ்ச்சியைத் தடுத்திடும் வகையிலும் - களங்கப்படுத்திடும் முறையிலும் செயல்படும் அதிமுக அரசின் நிர்வாக அலங்கோலத்தை இனிமேலும் திமுக பொறுத்துக் கொள்ள முடியாது என்று மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் எச்சரிக்கை விடுக்கிறது. இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கோ - அச்சுறுத்தலுக்கோ இந்த இயக்கம் என்றைக்கும் அஞ்சாது. அத்துமீறும் அராஜக நடவடிக்கைகளை, தமிழக மக்கள் கிஞ்சிற்றும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள், பொங்கி எழுவார்கள்.

ஆகவே, இந்த இயக்கத்திற்காக ஓயாது உழைத்திடும், உயிரினும் மேலான ஒவ்வொரு தொண்டரையும் காப்பாற்றிடும் பொருட்டு, திமுக நேரடியாகக் களம் காணும் மாபெரும் போராட்டத்தை அதிமுக அரசு சந்திக்க நேரிடும் என்று மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் கடுமையாக எச்சரிக்கிறது. எடப்பாடி அரசின் அநீதியைத் தட்டிக் கேட்கவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிக்கப்படும் திமுக தொண்டர்களை அடக்குமுறையிலிருந்து அரவணைத்துப் பாதுகாக்கவும், அதிமுக அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாகப் பட்டியலிடவும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழக்கறிஞர்கள் குழு அமைப்பது என்றும், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.