விவசாயிகளிடம் வாங்காமல் வியாபாரிகளிடம் நெல் பெறும் அவலம் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு: மவுனமாக இருக்கும் மாவட்ட நிர்வாகம்
* விவசாயிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு எடைபோட 3.25, ஏற்று, இறக்கு கூலியாக 25.50 என ஒதுக்கப்படுகிறது.
காஞ்சிபுரம்: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் முசரவாக்கம், கோவிந்தவாடி அகரம், தென்னேரி, அவளூர் உள்ளிட்ட 37 இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் செம்பாக்கம், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் உள்பட 25 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன.இந்த நெல் கொள்முதல் மையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் பெறப்படும். அந்த வகையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் அறுவடை காலம் தொடங்கும். ஆனால் மார்ச் மாதத்தில் தொடங்க வேண்டிய நெல் கொள்முதல் நிலையங்கள் ஜனவரி மாதமே தொடங்கப்பட்டு வியாபாரிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து, நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் லாபம் பார்த்தனர். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்கள் மற்றும் தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம் உள்பட பல பகுதிகளில் இருந்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ததுபோல் கணக்கு காட்டி, வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்துள்ளனர்.
சமீபத்தில் பெய்த திடீர் மழையால், விவசாயிகள் வைத்திருந்த நெல் மூட்டைகள் நனைந்துவிட்டது என விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதனால், அவசர அவசரமாக காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்தனர் என காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் கடுமையாக குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், விவசாயிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு எடைபோட 3.25, ஏற்று, இறக்கு கூலியாக 25.50 என ஒதுக்கப்படுகிறது. ஆனால், இந்த பணத்தை முழுவதுமாக விவசாயிகளுக்கு கொடுப்பதை மறைத்துவிட்டு, நெல் கொள்முதல் செய்யும்போது 40 கிலோ மூட்டைக்கு தலா 65 வரை ஏற்றுகூலி, இறக்கு கூலி, கோணி ஆகியவைக்காக விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுகிறது.
இதில் 10 முதல் 15 வரை நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளருக்கு கையூட்டு செல்வதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதே நேரத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையும் மறைக்கப்படுகிறது. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 3 மாதத்திற்கு ஒப்பந்த தொழிலாளர்களை தேர்வு செய்வதற்கும் ₹1 லட்சம் வரை கைமாறுவதாகவும் கூறப்படுகிறது.