http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__433529078960419.jpg

மகாராஷ்டிராவில் கொரோனா கோரத்தாண்டவம்: பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது

* ஒரே நாளில் அதிகபட்சமாக 3,041 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி: 58 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா வைரசின் தாக்கம் மேலும் வீரியமடைந்துள்ளது. நேற்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 3,041 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.. நாட்டின் வேறு எந்த மாநிலத்தையும் விட மகாராஷ்டிராவிலும், மும்பையிலும் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினசரி சராசரியாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கடந்த 22ம் தேதியன்று 2,940 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அன்றைய தினம் மகாராஷ்டிராவில் 63 பேர் பலியாகியிருந்தனர்.

நேற்று முன்தினம் வரை மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 47,190 ஆகவும், பலி எண்ணிக்கை 1,577 ஆகவும் இருந்தது. இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரேநாளில் 3,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் மட்டும் நேற்று 2,725 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. மும்பை உட்பட மாநிலம் முழுவதும் நேற்று கொரோனாவுக்கு மேலும் 58 பேர் பலியாகினர்.

இதன் மூலம் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,231 ஆகவும், பலி 1,645 ஆகவும் அதிகரித்தது. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 14,600 பேர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். மும்பை நகரில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,542 ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.