http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__942409694194794.jpg

சுகாதாரத்துறைக்கு தோல்வி மேல் தோல்வி எதிரொலி: சென்னையின் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படுமா?

* குறையாத கொரோனா தாக்கம்
* பீதியில் மக்கள்
* கட்டுப்பாட்டு பகுதியில் கண்டிப்புடன் மக்களை கட்டுப்படுத்தி வைத்து நோய் பரவலை தடுப்பதை விட்டு மற்ற பகுதிகளை போன்று இங்கு ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தியது பெரிய அலட்சியப்போக்கு

சென்னை: பெரிய ஹாட் ஸ்பாட் பகுதிகளாக மாறியுள்ள சென்னை மண்டல பகுதிகளில் கூட ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தாமல் விட்டதால் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து   வருகிறது. அத்துடன் இறப்பும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. சுகாதார துறையினரின் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு திட்டங்கள்  வெற்றியடையாமல் தோல்வி மேல் தோல்வியை தழுவி  வருவது மக்கள் மத்தியில் அதிருப்தியை, பீதியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனோ தொற்றை கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கையில் தொய்வு விழுந்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு தான் தடுப்பு பணிகள் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

60 நாட்களுக்கு மேல் வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள் தற்போது ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து சாதாரணமாக வெளியில் வரத் தொடங்கியுள்ளனர். இன்னும் 50 சதவீத மக்கள் இந்த தொற்றில்  இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் வீடுகளிலே முடங்கி கிடக்கின்றனர். இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள மக்களுக்கு இன்னும் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா பரவலுக்கு  இதுவும் முக்கிய காரணம்.  மத்திய அரசு சிவப்பு மண்டல பகுதிகளை அறிவித்து அங்கு எந்த தளர்வும் இருக்கக்கூடாது என்றும் அறிவித்துள்ளது. அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னையில் அந்த கட்டுப்பாடுகளை காண முடியவில்லை.

கோயம்பேடு மார்க்கெட்டை தொடர்ந்து சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவது அதிக வேகமெடுத்துள்ளது. ஆனால் அதை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டிய சுகாதாரத் துறையோ அதிக தொற்றுள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் கூட அலட்சியம் காட்டுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. சென்னையை  பொறுத்தவரை கொரோனா பாதிப்பு என்பது 10,576 என்ற எண்ணிக்கையில் வேகமெடுத்துள்ளது. இதில் தொற்று அதிகமாக உள்ள ராயபுரத்தில் -1889, திருவிக நகர்-1133, கோடம்பாக்கம்-1391 என இந்த  3 மண்டலங்களில் ஆயிரத்தை கடந்து மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதற்கு அடுத்த படியாக தேனாம்பேட்டை -1054,  தண்டையார்பேட்டை-974, அண்ணாநகர் 829 என்ற அளவில் உள்ளது.

 இப்பகுதிகளில் வீடு வீடாக டெஸ்ட் எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை சுகாதாரத்துறை செய்ய தொடங்கியிருந்தாலும், வேறு எந்த நடவடிக்கைகளும் எடுத்த மாதிரி தெரியவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.  ஏனென்றால் அங்கு ஊரடங்கு தளர்வு அதிகமாகவே காணப்படுகிறது. ஹாட் ஸ்பாட்  பகுதிகளுக்கான வழிகாட்டி நெறிமுறையே காணவில்லை. இப்படி இருந்தால் சென்னையில் எப்படி கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.
 இதுகுறித்து ஹாட் ஸ்பார்ட் பகுதிகளில் உள்ள தன்னார்வலர்கள் கூறியதாவது: சென்னையில் ஹாட் ஸ்பாட் பகுதிகள் என்று அழைக்கப்படும் ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கத்தில் கூட சரியாக ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை.

 கட்டுப்பாட்டு பகுதியில் கண்டிப்புடன் மக்களை கட்டுப்படுத்தி வைத்து நோய் பரவலை தடுப்பதை விட்டு மற்ற பகுதிகளை போன்று இங்கு ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தியது பெரிய அலட்சியப் போக்கு. கட்டுப்பாட்டு பகுதிகளில் தான் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அப்படி இருந்தும் அரசு அலட்சியம் காட்டுவது ஏனோ?. வீடுகளில் முடங்கக்கூடிய மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி வெளியில் வராமல் தடுத்தால் சீக்கிரமாக கட்டுப்படுத்த முடியும். இப்படி எதையும் செய்யாமல் சுகாதாரத் துறையினர் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டி வருவதால் தான் அவர்களுக்கு தோல்வி மேல் தோல்வி தான் கிடைக்கிறது.

எப்போது கொரோனா எண்ணிக்கை குறைய தொடங்குகிறதோ அதுவரை ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தினால் மட்டுமே சென்னையில் கொரோனா தடுப்பில் வெற்றி கிடைக்கும். அதுவரை இப்படியே தான் தினமும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த மண்டலங்களில் இருந்து மற்ற மண்டலங்களை பிரிக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. இந்த 3 மண்டலங்களில் இருப்பவர்கள் மற்ற இடங்களுக்கு செல்லவிடாமல் தடுக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தினால் மட்டுமே சுகாதாரத்துறை இதில் வெற்றி பெற முடியும். மேலும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.