http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__939068019390107.jpg

‘இ-பாஸ்’ கிடைக்காததால் எல்லையில் டும் டும் தாலி கட்டியதும் ‘டாட்டா’ காட்டி கிளம்பிய மணமகள்: கேரள பெண்ணை மணந்த தமிழக வாலிபருக்கு சோதனை

கூடலூர்: தேனி மாவட்டம், கம்பம் அருகே புதுப்பட்டியைச் சேர்ந்தவர்  பிரசாத் (25). இவருக்கும் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், காரப்புழாவைச் சேர்ந்த காயத்ரிக்கும் (19) திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. குமுளி அருகே வண்டிப்பெரியாறு வாளார்டி மாரியம்மன் கோயிலில் நேற்று காலை திருமணம் நடப்பதாக இருந்தது.  கொரோனா ஊரடங்கால் மணமகன் வீட்டார் கேரளா செல்ல இ-பாஸூக்கு பதிவு செய்தனர். ஆனால், நேற்று காலை வரை அவர்கள் கேரளா செல்ல இ-பாஸ் கிடைக்கவில்லை. இதையடுத்து மணமகனுடன் ஒரு சிலர் மட்டும் முகூர்த்த நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்பதற்காக தமிழக எல்லைப்பகுதியான குமுளிக்குச் சென்றனர்.

பாஸ் இல்லாததால் மணமகன் மற்றும் அவரது வீட்டாரை கேரளாவுக்குள் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.அதேநேரம், பெண் வீட்டார் மாப்பிள்ளையின் வருகைக்காக வண்டிப்பெரியாறில் காத்திருந்தனர். மணமகனுக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை என்ற தகவல் பெண் வீட்டாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மணமகன் வீட்டார் குமுளி இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷிடம் தெரிவித்தனர். அவரது ஆலோசனைப்படி, முகூர்த்த நேரத்திற்குள் மணப்பெண்ணை எல்லைப்பகுதிக்கு வரவழைத்து திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

 இதையடுத்து பெண் வீட்டார் மணமகளுடன் கிளம்பி தமிழக எல்லைப்பகுதியான குமுளிக்கு வந்தனர். அங்கு குமுளி இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் பிரசாத், காயத்ரி திருமணம் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொள்ள எளிமையாக நடந்தது. மணமக்களை எல்லைப்பகுதியில் இருந்த கேரள வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார், தன்னார்வலர்கள் வாழ்த்தினர். கேரளா செல்ல மணமகனுக்கும், தமிழகம் வருவதற்கு மணமகளுக்கும் பாஸ் இல்லாததால், வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்ட மணமக்கள் திருமணம் முடிந்ததும் அவரவர் வீட்டுக்குத் திரும்பினர். தாலி கட்டி முடித்த சிறிதுநேரத்தில் மணமகள் தனது ஊருக்குக் கிளம்பிச் சென்றதால், மணமகன் பிரசாத் ஏமாற்றத்துடன் கம்பம் திரும்பினார்.

கொரோனா பாதிப்பால் திருமணம் முடிந்ததும்  தனிமைப்படுத்தப்பட்ட மணப்பெண்
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே 74.கிருஷ்ணாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த 27 வயது வாலிபருக்கும், சென்னை வடபழனியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கும் 24ம் தேதி (நேற்று) திருமணம் நடக்க இருந்தது. இதற்காக கடந்த 22ம் தேதி, சென்னையில் இருந்து பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் தனித்தனி வாகனங்களில் இளம்பெண் கெங்கவல்லிக்கு புறப்பட்டு வந்தார். அப்போது, மாவட்ட எல்லையான நத்தக்கரை சோதனைச்சாவடியில், சுகாதாரத்துறையினர் அப்பெண்ணுக்கு ரத்த மாதிரி எடுத்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அந்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருப்பது மறுநாள் தெரிய வந்தது.

இதையடுத்து, மருத்துவ குழுவினர், இரவோடு இரவாக 74.கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு விரைந்தனர். திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. மணமகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பது குறித்து, பெற்றோரிடம் தெரிவித்து, அவரை தனிமைப்படுத்த அறிவுறுத்தினர். திருமணம் முடிந்ததும் தனிமைப்படுத்துங்கள் என இருதரப்பு பெற்றோரும்  கேட்டுக்கொண்டனர். கலெக்டர் ராமன் அனுமதி பெற்றதை தொடர்ந்து நேற்று காலை 6 மணியளவில், இளம்பெண்ணுக்கும், பட்டதாரி வாலிபருக்கும் திருமணம் நடந்தது. 10 பேர் மட்டும் கலந்து கொண்டனர். பின்னர்,  மணமக்கள் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். சென்னையிலிருந்து வந்திருந்த 10க்கும் மேற்பட்டவர்களையும் தனிமைப்படுத்தினர்.