http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__663189113140107.jpg

நாடு முழுவதும் உள்நாட்டு போக்குவரத்து துவக்கம்: தமிழகத்தில் இன்று முதல் விமான சேவை

* தனிமைப்படுத்தும் விதிமுறைகள் அறிவிப்பு

சென்னை,: நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை இன்று துவங்குகிறது. கடுமையான  கெடுபிடிகளுக்கு மத்தியில் தமிழகத்திலும் அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. மேலும் விமான பயணிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக  அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதி ,ஊரடங்கு காரணமாக கடந்த 2  மாதங்களாக இந்தியா முழுவதும் பயணிகள் விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன.  இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்நாட்டு விமான சேவை இன்று முதல்  துவங்கும் என்று மத்திய அரசு  ஏற்கெனவே அறிவித்து இருந்தது. ஆனால்  சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ரயில் சேவை போன்று விமான  சேவையும் தமிழகத்துக்கு வேண்டாம் என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து  இருந்தது.

ஆனால், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தமிழக அரசின்  கோரிக்கையை ஏற்க மறுத்து, விமான சேவைகளை தமிழகம் உட்பட நாடு முழுவதும்  திட்டமிட்டபடி இன்று முதல் இயக்குவதில் உறுதியாக இருந்தது. இந்நிலையில்  சென்னையில் உள்நாட்டு விமான சேவை தொடங்குவது தொடர்பாக தலைமை செயலகத்தில்  தமிழக அரசின் உயரதிகாரிகள், மருத்துவத்துறையினர் மற்றும் விமான நிலைய  உயரதிகாரிகள் கலந்து கொண்ட உயர் மட்டக் குழுக்கூட்டம் நேற்று காலை நடந்தது.  இதையடுத்து தமிழக அரசு கடுமையான நிபந்தனைகளுடன்  உள்நாட்டு விமான சேவையான  வருகை மற்றும் புறப்பாடு என இரண்டும் தமிழகத்தில் இயக்க அரசு அனுமதி  வழங்கியுள்ளது.

மேலும் பயணிகள் மற்றும் விமான நிலையம் மூலம் கொரோனா பரவலை  கட்டுப்படுத்தும் வகையில் வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.  இதை பயணிகள் அனைவரும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது:விமான  சேவை தொடங்கும் முதல் நாளில் மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் மட்டும் இயக்க  அனுமதிக்கப்படும். அதன்பிறகு விமான சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்படும்.

* விமானம் மூலம் தமிழகத்துக்கு வருபவர்கள் தமிழக இ-பாஸ் வலைத்தளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.
* காய்ச்சல், இருமல், சளி இருக்கிறதா? தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து  வருகிறீர்களா? கடைசி இரண்டு மாதத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாதவரா?  உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
* விமான டிக்கெட்  வாங்கியவுடன் தங்கள் விவரங்களையும், எந்த விமான நிலையம் வந்து சேருவர் என்ற  தகவலையும் தமிழக இ-பாஸ் வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
* ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இருப்பின் அவர்களையும் இணையத்தில் பதிவு  செய்ய வேண்டும், வீட்டு முகவரி, தொடர்பு எண்ணை பதிவு செய்ய வேண்டும்
* தாங்கள் நோய் கட்டுப்பாட்டு மண்டலத்திலிருந்து வரவில்லை என்பதற்கான உறுதியை  தர வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிப்போர் மற்றும் கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விமானத்தில் பயணிக்க முடியாது.
* நோய் அறிகுறி இல்லாமல் இருந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
* தவறான தகவல் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
* காய்ச்சல், இருமல் பிரச்னை ஏற்பட்டால் உடனே மருத்துவ அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
* விமானத்தினுள் பயணிகளுக்கு உணவு வழங்கக்கூடாது, ஒவ்வொரு இருக்கையிலும் குடிநீர் பாட்டில் வைக்க வேண்டும்.
* பயணிகள் தங்களது உடல்வெப்ப நிலையை அதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள இடத்தில்  கட்டாயம் பரிசோதிக்க வேண்டும். பயண நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு  முன்னதாக உடமைகளை ஒப்படைத்துவிட வேண்டும்.
* பயணிகள் அனைவரும் ஆரோக்கிய  சேது செயலியை பயன்படுத்த வேண்டும் அல்லது படிவத்தில் தங்களது விபரத்தை  பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம் 14  வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆரோக்கிய சேது செயலி கட்டாயமில்லை .
* விமான நிலையத்திற்குள் நுழைவதில் இருந்து பயணம் முடியும் வரை பயணிகள் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
* விமானநிலையத்தில் பயணிகள் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதற்காக குறியீடுகள் வரைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக அனைத்து பயணிகளின் கைகளிலும் குவாரன்டைன் என அழியாத மை மூலம் சீல் வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சேவை எப்போது? சர்வதேச  விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், விமான நிலையங்கள் மற்றும்  பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, கடந்த இரண்டு மாதங்களாக உள்நாடு, சர்வதேச விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூன்  மாத இடையில் அல்லது ஜூலை மாத இறுதிக்குள் சர்வதேச விமான சேவை  தொடங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதற்கான  முன்பதிவும் விரைவில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சென்னையில் இருந்து...
நகரம்    மொத்த விமானம்    இன்றைய குறைந்தபட்ச கட்டணம்
டெல்லி        9    4984
மும்பை        7    3934
மதுரை        3    3410
திருச்சி        2    3880
கோவை        2    2360
தூத்துக்குடி    1    7608
பெங்களூரு    5    2360
ஐதராபாத்    5    4300
கொச்சி        1    7556
திருவனந்தபுரம்    1     5856