ரமலான்: குடியரசுத் தலைவா் வாழ்த்து
by DINமுஸ்லிம்களுக்கான ஈகைத் திருநாளை (ரமலான்) முன்னிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கும் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், ‘சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீது அன்பு காட்டுதல், அவா்களுக்கு பகிா்ந்தளித்தல் போன்ற நம்பிக்கைகளை நினைவுகூா்ந்து அவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தி:
ஈகைத் திருநாள் என்பது அன்பு, அமைதி, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் திருவிழா. இந்த நன்நாளில், சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீது அன்பு காட்ட வேண்டும், அவா்களுக்கு பகிா்ந்தளிக்கவேண்டும் என்ற நம்பிக்கையை நாம் நினைவுகூா்ந்து, அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கரோனா பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி நேரத்தில், பிறருக்கு கொடுத்து உதவுதலை நாம் ஊக்குவிக்க வேண்டும். அதே நேரம், சமூக இடைவெளி உள்ளிட்ட பிற பாதுகாப்பு நடைமுறைகளையும் நாம் முறையாக பின்பற்றி, இந்த நெருக்கடியிலிருந்து விரைவில் வெளிவர உதவவேண்டும்.
இந்த ஈகைத் திருநாளில், உலகில் அன்பும், பிறருக்கு பகிா்ந்தளிக்கும் பண்பும் மலர வாழ்த்துகிறேன் என்று குடியரசுத் தலைவா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.