https://img.dailythanthi.com/Articles/2020/May/202005250155536019_Coronal-impact-in-Chennai-increased-to-10576_SECVPF.gif

தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் சாவு சென்னையில் கொரோனா பாதிப்பு 10,576 ஆக உயர்வு

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 576 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை,

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 576 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேர் நேற்று மரணம் அடைந்தனர்.

உலக அளவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் 8 பேர் நேற்று (24-ந்தேதி) உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,003 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னையில் நேற்று 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 576 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து வருகிறவர்களாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் மராட்டியம், டெல்லி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 45 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்து உள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 765 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 277 ஆக உயர்ந்து இருக்கிறது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 464 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் ஆவர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தது தெரியவந்து உள்ளது. அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த 68, 62, 57, 52, 46 வயதுடைய 5 ஆண்களும், 60 வயது பெண்ணும், திருவள்ளுரைச் சேர்ந்த 65 வயது ஆணும், செங்கல்பட்டை சேர்ந்த 50 வயது ஆணும் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்து இருக்கிறது.

தமிழக மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை சிகிச்சை குணம் அடைந்து மருத்துவமனைகளில் இருந்து 8 ஆயிரத்து 324 பேர் வீடு திரும்பி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 833 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். மருத்துவமனைகளில் 5 ஆயிரத்து 643 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 18 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் சென்னையில் 587 பேரும், செங்கல்பட்டில் 46 பேரும், திருவள்ளூரில் 34 பேரும், காஞ்சீபுரத்தில் 21 பேரும், கள்ளக்குறிச்சியில் 15 பேரும், விருதுநகரில் 13 பேரும், தூத்துக்குடியில் 11 பேரும், தேனி, மதுரையில் தலா 6 பேரும், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேரும், திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், திருவாரூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், அரியலூரில் ஒருவரும் நேற்று கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 47 பேர் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். அவர்களில் மராட்டியத்தைச் சேர்ந்த 39 பேரும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 2 பேரும், டெல்லி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவரும், மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 2 வெளிநாட்டினரும் அடங்குவார்கள்

மேலும் தமிழகத்தில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 1,003 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,358 முதியவர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 12 ஆயிரத்து 275 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை 4 லட்சத்து 9 ஆயிரத்து 615 மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இதில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 690 மாதிரிகளில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்து இருக்கிறது. மேலும் 648 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. 18 ஆயிரத்து 363 மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.