4 கோடி பேரில் 75 லட்சம் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர்: மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் 4 கோடி இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளதாகவும், அவர்களில் 75 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக பிறப்பித்துள்ள ஊரடங்கு, பல கோடி இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பறித்து விட்டது.பொது போக்குவரத்து சாதனங்களும் முடக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் படுகிற அல்லல்களை ஊடகங்களும், சமூக ஊடகங்களும் காட்சிப்படுத்துவதைப் பார்க்கிறபோது கல்நெஞ்சங்களும் கரைந்து விடுகின்றன. இதன் காரணமாக, இடம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு சேர்க்க மத்திய அரசு ஷர்மிக் சிறப்பு ரெயில்களை விடத் தொடங்கியது.
இந்த பிரச்சினை குறித்து மத்திய உள்துறை இணைச் செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பார்த்தால் நாடு முழுவதும் 4 கோடி இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர்.இதுவரை 75 லட்சம் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டனர். இதில் சிறப்பு பஸ்கள் மூலம் மட்டுமே 40 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு போய்ச் சேர்ந்துள்ளனர்.இடம் பெயர்ந்த தொழிலாளர்களை கவனித்துக்கொள்ளுமாறு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு மார்ச் மாதம் 27-ந் தேதி அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியது. அவர்களுக்கு உணவுக்கும், தங்குமிடங்களுக்கும் ஏற்பாடு செய்து தருமாறும் கூறப்பட்டது. இதற்காக அவர்கள் தேசிய பேரிடர் நிவாரண பதிலளிப்பு நிதியை பயன்படுத்துமாறும் அதிகாரம் வழங்கப்பட்டது.தேசிய பேரிடர் நிவாரண பதிலளிப்பு நிதியாக மாநிலங்களுக்கு மத்திய அரசு கடந்த மாதம் 3-ந்தேதிவாக்கில், ரூ.11 ஆயிரத்து 92 கோடியை வழங்கியது.இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை கவனிப்பதற்காக இணைச் செயலாளர் அந்தஸ்து அதிகாரிகள் மேற்பார்வையில் 24 மணி நேரமும் இயங்குகிற கட்டுப்பாட்டு அறையை உள்துறை அமைச்சகம் அமைத்தது.இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவும், தங்குமிடமும் ஏற்பாடு செய்து தருவது குறித்து விளம்பரப்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.இடம் பெயர்ந்த தொழிலாளர்களை லாரிகள் மூலம் செல்வதற்கு அனுமதிக்கக்கூடாது எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த விதிமுறை மீறப்பட்டால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள்தான் பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டது.இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலங்களுக்குள் உள்ள சொந்த இடங்களுக்கு செல்ல கடந்த மாதம் 19-ந் தேதியும், வேலை பார்த்த மாநிலங்களில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு ரெயில்களில் செல்ல கடந்த 1-ந் தேதியும் அனுமதி வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.