சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்பட17 தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதி செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்க தமிழக அரசு அறிவுறுத்தல்
சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் 25 சதவீத தொழிலாளர்களுடன் இன்று முதல் இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, செயல்பாட்டு நடை முறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது.
சென்னை,
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த காலகட்டத்தில் மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக அரசு படிப்படியாக தளர்த்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, வேளாண்மை, சிறு தொழில் உள்ளிட்ட துறைகளில் பணிகள் தொடங்கி உள்ளன. அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) முதல் சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.
1964-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை தெற்கு ஆசியாவிலேயே பெரிய தொழிற்பேட்டை ஆகும். 1,430 ஏக்கருக்கும் மேல் பரந்து விரிந்துள்ள இந்த தொழிற்பேட்டையில் 1,800 நிறுவனங்கள் உள்ளன. மோட்டார் வாகன உதிரி பாக தொழிற்சாலைகள் அதிக அளவில் இருக்கின்றன. இது தவிர ஆடை தயாரிப்பு, என்ஜினீயரிங் உள்ளிட்ட நிறுவனங்களும் உள்ளன.
தொழிற்பேட்டைகளை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.
தற்போது, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கைக்கு என பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகளை இயக்க தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைக்கு உட்படாத தொழிற்பேட்டைகள், அதாவது சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் 25-ந் தேதி (இன்று) முதல் அந்த தொழிற்பேட்டை பகுதிகளிலேயே உள்ள 25 சதவீத தொழிலாளர்களை மட்டும் கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
எனினும், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை.
தொழிற்பேட்டைகள் பின்பற்ற வேண்டிய அம்சங்கள் வருமாறு:-
* தினமும் தொழிலாளர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலமாக உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படவேண்டும்.
* பணியாளர்கள் அனைவரும் முக கவசம் அணிவதை உறுதி செய்யவேண்டும்.
* சமூக இடைவெளியை கடைபிடித்து பணியாற்றுவதை உறுதி செய்யவேண்டும்.
* தினமும் காலை மற்றும் மாலையில் தொழிற்சாலையை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
* 55 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வருவதை தவிர்க்கவேண்டும்.
* தொழிலாளர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு பணியிலிருந்து விடுப்பு அளிக்கப்படவேண்டும்.
* சோப்பு மற்றும் கிருமி நாசினி உபயோகப்படுத்தி அடிக்கடி கைகளை கழுவும் நடைமுறையை பின்பற்றவும், கிருமிநாசினிகளை பயன்படுத்தவும், போதுமான வசதிகளை ஏற்படுத்தவேண்டும்.
* இதுதவிர பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசால் தனியாக வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.