
ஊரடங்கால் தமிழகம், புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்
ஊரடங்கு உத்தரவால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தி வருகின்றனர்.
சென்னை,இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு, ரமலான் மாத இறுதி நாளில் பிறை தெரியும். பிறை தென்பட்ட மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை திங்கள் கிழமை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவிப்பு வெளியிட்டார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.இதனால், மசூதிகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் உள்பட அனைத்து பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே தொழுகை நடத்தி வருகின்றனர். இவற்றில் சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.