ராஜபக்ச ஆட்சியில் தமிழரின் உரிமைகள் திட்டமிட்டு பறிப்பு- முன்னாள் பிரதமர் ரணில் குற்றச்சாட்டு

by

ராஜபக்சக்களின் கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் தமிழ் மக்களின் உரிமைகள் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த மக்களின் மனதை இந்த அரசு மேலும் நோகடித்து வருகின்றது. அத்துடன், தமிழ் மக்கள் மத்தியில் இந்த அரசு மீதான அதிருப்தி நிலையும் தொடர்ந்துகொண்டே செல்கின்றது என முன்னாள் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இறுதிப் போரில் உயிரிழந்த தமிழ் உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உட்பட சகல நினைவேந்தல்களையும் கடந்த நல்லாட்சி அரசில் தமிழ் மக்கள் எந்தத் தடையும் இன்றி சுதந்திரமாக - பகிரங்கமாக நினைவுகூர்ந்து வந்தனர்.

ஆனால், இம்முறை மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைப் பகிரங்கமாக அனுஷ்டிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசும் அதன் படைகளும் பல்வேறு இடங்களில் தடைகளை ஏற்படுத்திருந்தன.

இது தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசில் பிரதமராகப் பதவி வகித்த ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஊடகவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போரின்போது உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர்வது மக்களின் ஜனநாயக உரிமை. இதை எவரும் தடுத்து நிறுத்த முடியாது. எமது ஆட்சியில் வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையையும் நாம் விதிக்கவில்லை.

அதனால் அங்குள்ள தமிழ் மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை அமைதியாக நடத்தினார்கள். இதேவேளை, எமது ஆட்சியில் 'போர் வெற்றி விழா' என்ற பெயரில் நாம் எந்த நிகழ்வையும் நடத்தவில்லை. ஆனால், இந்த அரசு தேசிய படைவீரர்கள் தினத்தை 'போர் வெற்றி விழா' என்ற பெயரில் நடத்தியுள்ளது.

இந்த அரசு முன்னைய ஆட்சியிலும் இதே பெயரில் இந்த விழாவை நடத்தியிருந்தது. எமது ஆட்சியில் மே 19ஆம் திகதியை 'தேசிய படைவீரர்கள் தினம்' என்றே நாம் பிரகடனப்படுத்தி அன்றைய நாளை அமைதியான நிகழ்வுடன் நடத்தினோம். ஏனெனில், உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இலங்கையர்களாவர்.

அதனால் போரால் பாதிக்கப்பட்டவர்களின் மனதைப் புண்படுத்தக்கூடாது என்பதற்காக 'போர் வெற்றி விழா' என்ற பெயரில் எந்த நிகழ்வையும் நாம் நடத்தவில்லை.

தற்போது ஆட்சியிலுள்ள ராஜபக்ச அரசு, நல்லாட்சியில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளையும் பறித்துள்ளது.

இந்த அரசு கடந்த ஆட்சியிலும் இதையே செய்தது. இந்த ஆட்சியிலும் திரும்பவும் அதையே செய்கின்றது. மூவின மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

இதில் நான் பெரிது; நீ சிறிது என்ற வேற்றுமை இருக்கக்கூடாது. அப்போதுதான் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும். ஆனால், ராஜபக்ச ஆட்சியில் நல்லிணக்கம் ஏற்படுவது கேள்விக்குறியே என குறிப்பிட்டுள்ளார்.