கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது: பிரேமலதா விஜயகாந்த்
by nirubanகொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் ரமலான் திருநாளை ஒட்டி இஸ்லாமியர்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கான பொருட்களை பிரேமலதா வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருவதாகவும், அதில் ஊரடங்கு உத்தரவு சரியான நேரத்தில் அமல்படுத்தியது, அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவது போன்றவை பாராட்டுக்குரியவை என்று கூறினார்.
ஒவ்வொரு இயற்கை பேரிடரின் போதும் மனிதநேயத்தை அந்த நிகழ்வுகள் மக்களுக்குக் கற்றுத் தருவதாகவும், அதேபோல் இந்த கொரோனாவும், மக்களுக்கு மனிதநேயம் என்ன என்பதை கற்று தந்து இருப்பதாகவும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தமிழக அரசு அறிவிக்கும் அறிவிப்புகளை முறையாக பின்பற்றினால் விரைவில் தமிழக மக்கள் இந்த கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மீள முடியும் என்றும், சிவப்பு மண்டலமாக இருக்கும் சென்னை மண்டலம், விரைவில் பச்சை மண்டலமாக மாறும் என்றும் கூறினார்.
தமிழக அரசின் இது போன்ற நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது என்றாலும் மதுக்கடைகளை இதுபோன்ற நேரத்தில் திறந்தது மிகப்பெரிய குறையாகவும், வருத்தமாகவும் இருப்பதாகவும் கூறினார். தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வருவதாக எழுப்பிய கேள்விக்கு, எதிர்க்கட்சிகள் அரசின் செயல்பாடுகளுக்கு எதிராகதான் கருத்துக்களை தெரிவிக்கும் என்று விளக்கமளித்தார்.
இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரம் எந்த காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கும் அறிவிப்புக்கு பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்தார். மாநில அரசுக்கு வருவாய் குறைவாக உள்ளது என்பதை காரணம் காட்டி மதுக்கடைகளைத் திறந்து, அதன் மூலம் வருவாயை ஈட்ட நினைக்கும் மாநில அரசு, வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி தருவது அரசின் கடமை என்றும் பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்தார்.