மகனின் இறுதிச் சடங்குகளை செய்ய இயலாத குடும்பம்: ஊர் விலக்கம் செய்த கிராமம்!
by dhamotharanஊரடங்கால் தனது மகனின் இறப்பு சடங்குகளை செய்ய இயலாத குடும்பத்தை கிராம மக்கள் ஊர் விலக்கம் செய்துள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் கஜ்வா கிராமத்தில் வசிக்கும் விவசாயி பிரிஜ்கோபால் பட்டேல் என்பவருடைய 15 வயது மகன் கடந்த மார்ச் 9ம் தேதி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதனிடையே மார்ச் 22ம் தேதி நாடு முழுவதும் ஒருநாள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதனால் தனது மகனின் 13வது நாள் சடங்குகளை அவரால் செய்ய முடியவில்லை. அதன் பிறகும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாதால் சடங்குகளை செய்யாமல் விட்டுள்ளார்.
இந்நிலையில் சடங்குகளை செய்யாத காரணத்தால் தங்கள் குடும்பத்தை கிராம மக்கள் ஊர் விலக்கம் செய்துள்ளதாக பிரிஜ்கோபாலால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இறுதிச் சடங்குகளை முடிக்கும் வரை கிராமத்தில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என்றும், கிணற்றில் தண்ணீர் எடுக்க தடை விதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் சடங்குகளை செய்ய முடியாமல் போனதாக குறிப்பிட்டுள்ள அவர், கூட்டம் கூடினால் கொரோனா பரவும் அச்சம் இருப்பதால் சடங்குகளை தள்ளி வைத்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறு நிரூபிக்கப்படும் பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராஜ்நகர் ஜன்பத் பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி பிரதிபால் சிங் பக்ரி கூறுகையில், ‘யாரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது தவறான நடைமுறை. விவசாயிக்கு உதவி செய்து, தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தருவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார்.
கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மகனின் இறப்புக்கு பின் செய்யப்படும் சடங்கை நிறைவேற்ற இயலாத குடும்பத்தை, கிராம மக்கள் ஊரை விட்டே ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.