தமிழக அரசின் தவறான நடவடிக்கைகளால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது: மு.க.ஸ்டாலின்
by saravanamanojமருத்துவக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசின் தவறான நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி, மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறதென தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், முகக் கவசங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட், முகக்கவசம் போன்ற மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முறையாக அப்புறப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
மருத்துவ கழிவுகளை சென்னையைச் சுற்றியுள்ள வழக்கமான குப்பை கொட்டும் இடங்களில் குழிதோண்டிப் புதைக்கும் ஆபத்தான செயல் நடைபெறுவதாகவும், அதனால் குப்பைகளை அள்ளிச் செல்லும் தூய்மை பணியாளர்களுக்கும் பாதுப்பில்லாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே பாதுகாப்பான முறையில் எச்சரிக்கையாகக் குப்பைகளை அகற்ற வேண்டுமென்று தெரிவித்துள்ள மு.க. ஸ்டாலின், ஒவ்வொரு நாளும் எவ்வளவு மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டு, அறிவியல் ரீதியாக அழிக்கப்பட்டன என்பதைத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.