https://d13m78zjix4z2t.cloudfront.net/pe.png

கேரளப் பெண் - தமிழக மாப்பிள்ளை... ஊரடங்கால் எல்லைப்பகுதியில் நடைபெற்ற திருமணம்!

by

இபாஸ் கிடைக்காததால் தமிழகத்தைச் சேர்ந்த மாப்பிள்ளைக்கும், கேரளாவைச் சேர்ந்த பெண்ணிற்கும் இரு மாநில எல்லையில் வைத்து திருமணம் நடைபெற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கேரள மாநிலம் கோட்டயம் காரப்புழா பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் என்பவரது மகள் காயத்ரிக்கும், தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த ரத்தினம் மகன் பிரசாத்  என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.  இவர்களது திருமணம், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமிளி அருகேயுள்ள வண்டிப்பெரியாறு வாளார்டி எஸ்டேட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதாலும், மணமகன் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டியிருந்ததாலும் கேரளா செல்ல இ-பாஸ் பதிவு செய்தனர். இன்று காலைவரை கேரளா செல்ல பாஸ் கிடைக்கவில்லை. 

முகூர்த்த நேரத்திற்குள் செல்லவேண்டும் என்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் ஒருசிலர் மட்டும் இன்று காலை தமிழக எல்லையான குமுளிக்கு சென்றனர். அங்கு நீண்ட நேரம் காத்திருந்தும் அவர்களுக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை. இ-பாஸ் இல்லாததால் மணமகன் குடும்பத்தை கேரளாவுக்குள் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அதே நேரம் மாப்பிள்ளையின் வருகைக்காக பெண்வீட்டார் கேரளாவில் உள்ள வண்டிப்பெரியாறில் காத்திருந்தனர். இந்நிலையில் இதுகுறித்து மாப்பிள்ளை குடும்பத்தார் குமுளி இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷிடம் தெரிவித்தனர். 

அவரது அறிவுரையின்படி முகூர்த்த நேரத்திற்குள் மணப்பெண்ணை எல்லைப்பகுதிக்கு வரவழைத்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து இரு குடும்பங்களும் பேசி திருமணத்தை, குமுளி காவல் நிலையம் அருகே வைத்து நடத்த முடிவு செய்தனர். உடனே மணப்பெண்ணுடன் பெண்வீட்டார் அங்கு வந்தனர். அங்கு குமுளி இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் பிரசாந்த், காயத்தி திருமணம் ஒருசிலர் மட்டுமே கலந்துகொள்ள எளிமையாக நடைபெற்றது. 

எல்லையில் பணியில் இருந்த கேரள வருவாய்த்துறை அதிகாரிகளும், தன்னார்வலர்களும் மணமக்களை வாழ்த்தினர். கேரளா செல்ல மணமகனுக்கும், தமிழகம் வர மணப்பெண்ணுக்கும் பாஸ் இல்லாததால், இருவரும் திருமணத்திற்குப் பிறகு அவரவர் வீடு திரும்பினர்.