https://d13m78zjix4z2t.cloudfront.net/locust.png

5 லட்சம் ஹெக்டேர் பயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகள்!

by

ராஜஸ்தான் மாநிலத்தில் வெட்டுக்கிளிகள் தாக்குதலில் 5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நாசமாகியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து பறந்து வரும் வெட்டுக்கிளிகளால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடும் பயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. நடப்பாண்டின் தொடக்கத்தில், பஞ்சாப் மாநிலத்தில் வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்கு அதிக அளவிலான பயிர்கள் நாசமாயின. இதேபோல் தற்போது மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்குள் வெட்டுக்கிளிகள் நுழைந்தாலும், ராஜஸ்தான் மாநிலம்தான் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. 

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/lo.png

இந்த வெட்டுக்கிளிகளால் சுமார் 5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நாசமாகி உள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தானில்தான் அதிகம் பாதிப்பு காணப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக நீடிக்கும் வெட்டுக்கிளிகள் தாக்குதலால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது.  
மாநிலம் முழுவதும் வெட்டுக்கிளிகளை அகற்றுவதில்  அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வேளாண் துறை சார்பில் ரசாயன மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. வெட்டுக்கிளிகளால் கோதுமை, மற்றும் பட்டாணி உள்ளிட்ட பயிர்கள் அழிந்ததால் வங்கிக் கடன் செலுத்த முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/loo.png

வெட்டுக்கிளிகளை விரட்டுவதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், பகலில் எஃகு பாத்திரங்களை அடிப்பது, பலத்த சப்தத்தை உண்டாக்குவது, இரவு நேரத்தில் டிராக்டரை வயல்களுக்குள் இயக்குவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் சேதங்கள் தொடர்கின்றது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், வெட்டுக்கிளிகள் பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.  

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு விரைவான நடவடிக்கை இல்லையென்றால் விவசாயிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்று கவலை தெரிவித்த அவர், நிலைமையை சமாளிக்க மத்திய அரசின் உதவி தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.