தூத்துக்குடி சிவகளையில் இன்று முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்!
by saravanamanojதூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் இன்று முதல்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளன.
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் அருகே உள்ளது சிவகளை. அங்கு, 2 வருடங்களுக்கு முன்பு ஏராளமான முதுமக்கள் தாழிகளை அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் கண்டுபிடித்தார். இதையடுத்து அந்த பகுதியில் அகழாய்வு செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனை ஏற்று கடந்த மார்ச் மாதம் அகழாய்வு பணிகள் துவங்க இருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று அகழாய்வு பணிகள் துவங்கின. இந்த பணியை தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் துவக்கி வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிவகளையில் இன்று தொடங்கியுள்ள அகழாய்வு பணி செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என்றார். மேலும் இந்த பணியில் 10க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளும், 100க்கும் மேற்பட்ட ஊர் மக்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
சிவகளையில் நடைபெறும் அகழாய்வு பணியின்போது தமிழரின் வரலாற்று தொன்மையை விளக்கும் பல்வேறு அரிய பொருட்களை கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தொல்லியில் துறை இணை இயக்குனர் சிவானந்தம் கூறினார்.