முழு உடல் பரிசோதனைக்காக துணை முதல்வர் ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி!
by nirubanமுழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, முதலமைச்சர் பழனிசாமி நேரில் சந்தித்து அவரது உடல்நலன் குறித்து கேட்டறிந்தார்.
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதற்காக நேற்று இரவு சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முழு உடல்நல பரிசோதனை முடிந்து ஓய்வில் இருந்து வரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உடல் நலன் குறித்து கேட்டறிவதற்காக முதலமைச்சர் பழனிசாமி இன்று மருத்துவமனைக்கு வருகை புரிந்தார்.
முதலமைச்சருடன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ., விருகை ரவி, நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, பாலகங்கா, மைத்ரேயன் ஆகியோரும் மருத்துவமனைக்கு வருகை தந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உடல் நலன் குறித்து விசாரித்தனர்.சுமார் 20 நிமிட சந்திப்புக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நலமுடன் உள்ளதாக செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை வீடு திரும்ப உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் உடல் நலம் குறித்து தொலைபேசியில் நலம் விசாரித்தார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்.