
பிச்சை எடுத்த பெண்ணை மணந்த கார் ஓட்டுநர்: ஊரடங்கில் மலர்ந்த காதல்!
by dhamotharanஉத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கார் ஓட்டுநர் ஒருவருக்கும் பிச்சை எடுத்து வந்த பெண்ணுக்கும் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஊரடங்கால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தனி நபர்களும், தன்னார்வல அமைப்புகளும் பல்வேறு உதவிகள் செய்து வருகின்றன. அதுபோல் கான்பூரில் லல்டா பிரசாத் என்பவர் ஏழைகளுக்கு உணவு வழங்கி வந்துள்ளார். அவருடன் அவரது கார் ஓட்டுநர் அனில் என்பவரும் இந்த சேவையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்படி உணவு வழங்கும் போது, நீர்சீர் என்ற இடத்தில் நடைபாதையோரம் பிச்சை எடுத்து வந்த நீலம் என்ற பெண்ணை அனில் சந்தித்துள்ளார்.

அவர்களின் அடுத்தடுத்த சந்திப்பு காதலாக மலர்ந்து தற்போது கல்யாணத்தில் முடிந்துள்ளது. இந்த திருமணம்தான் கான்பூர் நகர் மக்களின் பேசுபொருளாக மாறியுள்ளது. காதல் திருமணம் குறித்து கூறிய மணமகள் நீலம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயுடன் வாழ்ந்து வந்ததாக கூறியுள்ளார். சகோதரனால் கைவிடப்பட்ட நிலையில் பிச்சை எடுத்து வந்ததாகவும், உணவு வழங்குவதற்காக தனது முதலாளியுடன் வந்த அனில், குடும்பச் சூழல் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டதாக குறிப்பிட்டார்.
பிச்சை எடுப்பதை விட்டு விட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அனில், பின்னர் தனது காதலை வெளிப்படுத்தியதாகவும் நீலம் தெரிவித்துள்ளார்.
அனில்-நீலம் ஜோடியின் திருமணம் கான்பூரில் உள்ள புத்த ஆஸ்ரமத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு நடந்துள்ளது. இதில் ஏராளமான சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர். 60 நாட்களுக்கும் மேலாக மக்களின் வாழ்வில் பல்வேறு இன்னல்களை உருவாக்கிய ஊரடங்கு, நீலம் போன்ற கடைநிலை பெண்ணுக்கு புது வாழ்வளித்துள்ளதாக கான்பூர் நகர மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.