புதுவையில் கொரோனா, சமூக பரவலாக தொடங்கிவிட்டதா என்ற அச்சம் உள்ளது: சுகாதாரத்துறை இயக்குநர்
by saravanamanojபுதுச்சேரியில், கொரோனா வைரஸ் சமூக பரவல் தொடங்கிவிட்டதாக, அச்சம் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும், என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 4 நாட்களாக புதுச்சேரியில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் இன்று மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த, மாநில சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 43 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக தொடங்கிவிட்டதா? என சந்தேகம் இருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமென, வேண்டுகோள் விடுத்தார்.
இதன் காரணமாக, கனகசெட்டிகுளம், முள்ளோடை, மதகடிப்பட்டு, திருக்கனூர், உள்ளிட்ட புதுச்சேரி மாநில எல்லைகளில் ,கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணிநேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இ-பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே, புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.